அலைபேசி வழியே ஆதிமனிதன் முதல் அண்மைச் செய்திகள் வரை உடனுக்குடன் அனைத்துத் தகவல்களையும் நாம் தெரிந்துகொள்ள வழிவகுத்த சமூக ஊடகங்களின் நாள் இன்று (ஜூன்30). மனிதச் சிந்தனையை மையமாகக் கொண்டு, அவன் எண்ணங்களால் ’கல்லா’ கட்டுவதுதான் கூகுள், ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப், மெசஞ்சர் போன்ற அப்ளிகேஷன்களின் வேலையே என்றாலும், சமூக ரீதியாக அவை ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.
![வாட்ஸ் ஆப்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12307034_whatsapp.jpg)
மக்களைக் கட்டிப்போடும் சமூக ஊடகம்
உலகில் எங்கோ ஓர் மூலையில் நடக்கும் செய்தியை, மற்றொரு கடைக்கோடியில் இருக்கும் ஒருவன் நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள உதவுவது சமூக ஊடகங்களே. இப்போதெல்லாம் செய்தித்தாள், தொலைக்காட்சிகள்கூட வியாபாரச் சந்தையில் தங்களின் இருப்பை நிலைப்படுத்திக்கொள்ளவும், மக்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப செய்திகளை விரைந்து தரவும் சமூக ஊடகங்களையே நம்பியிருக்கின்றன.
![யூ - டியூப்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12307034_youtube.jpeg)
புள்ளி விவரங்களின்படி, உலகில் இணையத்தைப் பயன்படுத்தும் 3.1 பில்லியன் மக்களை, சராசரியாக நாளொன்றுக்கு குறைந்தது இரண்டரை மணிநேரம் அலைபேசியுடன் பிணைத்து வைத்திருப்பது சமூக ஊடகங்களே ஆகும். தற்போது கரோனா காலத்தில், மக்கள் சமூக ஊடகங்களில் செலவிடும் நேரம் சராசரியைவிட அதிகரித்துள்ளது.
வாழ்க்கையையே மாற்றும் சமூக ஊடகம்
லிங்ட்-இன், வைன், ஸ்நாப்-சாட் போன்ற சமூக ஊடகங்கள் தொழில் ரீதியாக இயங்குகின்றன. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப் போன்றவை சமூக ஊடகங்கள் இயல்பான மக்களுக்கானவையாகவும் இயங்கிவருகின்றன.
![இன்ஸ்டாகிராம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12307034_insta.jpg)
அனைத்து தரப்பு மக்களின் கருத்து, திறமையை உலகறியச் செய்யும் இவற்றையே சாரும். நமது ஊர் டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து போன்ற சமூக ஊடகங்களால் பயனடைந்து வாழ்க்கைப் பயணமே முற்றிலும் மாறிப் போனவர்கள் ஏராளம்.
வினைக்கு எதிர்வினை
இன்று ஃபேஸ்புக், ட்விட்டர் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை, அந்தளவு அவை நம் அன்றாட வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டன.
![ட்விட்டர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12307034_twitter.jpg)
ஓர் வினைக்கு எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் மூன்றாம் விதிக்கு சமூக ஊடகங்களும் விதிவிலக்கல்ல போலும். இதில் எவ்வளவு நன்மைகள் நிறைந்திருக்கின்றனவோ, அதைவிட அதிகமாக அதன்மூலம் குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதனால் பெண்களும், குழந்தைகளும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
![ஃபேஸ்புக்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12307034_facebook.jpg)
விண்வெளி முதல் வியாபார நுணுக்கங்கள் வரை
சமூக ஊடகங்களால் பாதிக்கப்பட்டனர் என்பது நாளிதழில் தினசரி நடப்புச் செய்தியாகவே இடம் பெறும் அளவுக்கு குற்றங்கள் நடைபெறுகின்றன. சமூக ஊடகங்களால் நடைபெற்று உலகுக்குத் தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் குற்றங்கள் எண்ணிலடங்காதவை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல, சமூக ஊடகங்கள் அமிர்தமாவதும், நஞ்சாவதும் பயன்படுத்தும் நேரத்தையும், எண்ணத்தையும் பொறுத்தது.
விண்வெளி முதல் வியாபார நுணுக்கங்கள் வரை அனைத்தையும் அறியச் செய்து பலருக்கு வாழ்வின் அரணாய் விளங்குவதும் சமூக ஊடகங்களே. இப்படியாக நன்மை, தீமை என அனைத்து சுபாவங்களையும் தன்னுள் அடக்கி மக்களுக்குச் சேவை செய்யும் சமூக ஊடகங்களைச் சிறப்பிக்கும் இன்றைய நாளில் #SocialMediaday என்ற ஹேஷ்டேக் மூலம் ஒவ்வொருவரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 14 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டில் ஹிட்டான ரஜினி பாடல்