பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்.13) விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார்.
முன்னதாக ஒட்டுக்கேட்பு புகார் தொடர்பான அரசின் நிலைப்பாட்டையும், அதுதொடர்பான ஆவணங்களையும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என ஆகஸ்ட் 17ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு குறித்து அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், ”நீதிமன்றத்தில் ஒளிவுமறைவின்றி அரசு இந்த வழக்கை எதிர்கொள்ள விரும்புகிறது. அதேவேளை, தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை அரசு பொது வெளியில் சமர்ப்பிக்க இயலாது.
எனவே, இந்த விவகாரத்தின் நடைமுறை சிக்கல்களை நீதிமன்றம் உணரவேண்டும்” என்றார்.
பெகாசஸ் விவகாரம்
எதிர்க்கட்சிப் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரை பெகாசஸ் என்ற மென்பொருள் கொண்டு என்.எஸ்.ஓ என்ற குழுமம் ஒட்டுக்கேட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இந்த பெகாசஸ் மென்பொருளை இந்திய அரசு பயன்படுத்துவதால், இந்த விவகாரத்தில் அரசின் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். ஆனால், அரசு இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இதையும் படிங்க: குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்பு