டெல்லி காவல் துறையில் பண மோசடிக்கு ஆளானதாக ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், ’’தனியார் நிறுவனத்தினர் ஒன்று விமான நிலையங்கள், புகழ்பெற்ற அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினர்.
மேலும், இந்த நிறுவனத்தில் சேருவதற்கு முன்பணமாக ரூ.2,500 செலுத்தச் சொன்னார்கள். அதனை நம்பி நானும் பணத்தை அனுப்பினேன். ஆனால், எனக்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. இதனால், நான் பண மோசடிக்கு ஆளானேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து, வழக்குப்பதிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், டெல்லி ரமேஷ் நகரில் உள்ள கட்டடத்தில் ஒரு போலி நிறுவனம் இயங்கிவருவதைக் கண்டறிந்தனர். அங்கு சென்று சோதனை நடத்தியதில் ஏழு பேர் கொண்ட பெண்கள் குழு இந்தப் போலி நிறுவனத்தை நடத்திவருவது தெரியவந்தது.
இதையடுத்து, சுஷ்மிதா (26), சாயா (21), அகன்ஷா சர்மா (21), பூஜா (21), ரோஷ்னி (24), ரேகா (23), ஜோதி (29) ஆகியோரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இவர்களிடமிருந்து போலி ஆவணங்கள், ஆறு செல்போன்கள் போன்றவை பறிமுதல்செய்யப்பட்டன. வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆடைகளை பராமரிக்க அலமாறியையும் சற்று கவனியுங்கள்