இயல்பாகவே கருச்சிதைவு, கருக்கலைதல் மற்றும் குழந்தை இறந்து பிறத்தல் போன்ற பிரச்னைகளுடன் பக்கவாதத்தை தொடர்புபடுத்த முடியாது. இதனை அறிய அதிகமான பெண்களின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டியிருக்கும். இந்நிலையில் உலகின் மிகப் பிரபலமான மருத்துவ இதழான பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் இது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பல பெண்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்த ஆய்வின் மூலம் மலட்டுத்தன்மை, கருச்சிதைவு ஆகிய பிற உடல் நலப் பிரச்னைகள் பக்கவாதத்திற்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடும். இதில் எண்டோகிரைன் கோளாறுகள் (குறைந்த ஈஸ்ட்ரோஜன் அல்லது இன்சுலின் எதிர்ப்பு), வீக்கம், ரத்த ஓட்டத்தில் உதவும் எண்டோடெலியல் செல்கள், உளவியல் கோளாறுகள், ஆரோக்கியமற்ற நடத்தைகள் (புகைபிடித்தல் போன்றவை) அல்லது உடல் பருமன் ஆகியவை அடங்கும்.
அதிரவைக்கும் ரிப்போர்ட்: இந்த பத்திரிகை நடத்திய ஆய்வானது 32 முதல் 73 வயது வரை உள்ள 6,18,851 பெண்களிடம் நடத்தப்பட்டது. அவர்கள் செய்த ஆய்வில், 9,265 பெண்களுக்கு 2.8% பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் மற்றும் 4,003 பெண்களுக்கு 0.7% அபாயகரமான பக்கவாதம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஒட்டுமொத்தமாக, 91,569 பெண்களுக்கு அதாவது 16.2% பேருக்கு கருச்சிதைவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் 24,873 பேர் (4.6%) குழந்தை இறந்து பிறந்ததற்கான தகவலும் கிடைத்துள்ளது. இதுவரை கர்ப்பமாக இருந்த பெண்களில், கருச்சிதைவு ஏற்படாத பெண்களுடன் ஒப்பிடும்போது, கருச்சிதைவு ஏற்பட்டதாகப் புகாரளித்த பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படக்கூடிய அபாயம் 11% அதிகமாக உள்ளது.
ஒரு பெண்ணுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட முறை கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் அவருக்கு 35% பக்கவாதம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. இதன் ஆய்வில் ஒரு ஆண்டிற்கு லட்சத்திற்கு 43 பெண்களும், மற்ற பாதிப்புகளான மலட்டுத்தன்மை பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு ஆண்டிற்கு ஒரு லட்சத்தில் 53 பெண்களும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆபத்தான காரணங்கள்: பக்கவாதத்திற்கான அறியப்பட்ட பல ஆபத்து காரணங்களையும் இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய காரணங்களாகப் புகைப்பிடித்தல், உடல் பருமன் ஆகியவை இருப்பதாக தெரியவந்துள்து. இருப்பினும் சிலர் இது மாதிரியான பழக்கம் இல்லாவிட்டாலும் நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்படுவது தெரியவந்துள்ளது. ஆபத்து காரணிகளைச் சரிசெய்வதன் மூலம், பெண்களின் கருச்சிதைவுகள் மூலம் அதிகரித்த ஆபத்தை குறைக்க முடியும் என இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தகவலுடன் பெண்களும் அவர்களது மருத்துவர்களும் என்ன செய்ய வேண்டும்? டாக்டர்கள் இதய ஆரோக்கியத்தைப் பரிசோதிக்கும்போது, இதய நோய், இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக கண்காணிக்க வேண்டும். இந்த அபாயங்களைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் எதிர்கால நோய் அபாயத்தை மதிப்பீடு செய்து கணிக்கலாம்.
தற்போதைய ஆஸ்திரேலிய வழிகாட்டுதல்கள் 45 முதல் 74 வயதுடையவர்கள் அல்லது பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுவாசிகள் 30 வயதிலிருந்து இதய ஆரோக்கியப் பரிசோதனைகளை தவறாமல் நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதய நோய் அபாயம் 15% அதிகமாக இருக்கும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதய நோய்க்கான காரணம் என்னவாக இருந்தாலும், பக்கவாதம் வராமல் தடுப்பதற்கான சிறந்த வழி, முடிந்தவரை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதாகும். புகைப்பிடிப்பதை நிறுத்துதல், ஆரோக்கியமான உணவை உண்ணுதல், மிதமான மது அருந்துதல் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி செய்தல் ஆகியவை இந்த வாழ்க்கை முறையில் அனைவருக்குமான ஆபத்தைக் குறைக்கிறது.
இதையும் படிங்க:மார்பக புற்றுநோய்: ஆரம்ப நிலையில் கண்டறியும் “ஈஸிசெக் பிரெஸ்ட்” அறிமுகம்