நாடியா: மேற்கு வங்கத்தில் இரு கருப்பை கொண்ட பெண்ணுக்கு அரிய வகை அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. நாடியா மாவட்டம் சாந்திபூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு அரிதாக இரு கருப்பை இருந்துள்ளது. பெண்களின் இனப் பெருக்க பாதையான முல்லேரியன் குழாயில் ஏற்படும் கோளாறு காரணமாக இது போன்று அரிதாக இரண்டு கருப்பை ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக அளவில் 17 பேருக்கு மட்டுமே இது போன்று இரு கருப்பை பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் 3 பேருக்கு இந்த பிரச்சினை இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்ணுக்கு சிகிச்சை அளித்த சாந்திபூர் பொது மருத்துவமனையில் மட்டும் இரு கருப்பை கொண்ட இரண்டு பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நரசிங்கபூர் பகுதியைச் சேர்ந்த அர்பிதா மண்டல் என்ற பெண்ணுக்கு அரிய வகை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்ததாக மருத்துவர்கள் கூறினர். தாயும், இரு குழந்தைகளும் புரண நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவ பரிசோதனைக்காக வந்த போது அர்பிதா மண்டலுக்கு இந்த அரிய பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், சிறப்பு மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அர்பிதா மண்டலுக்கு நல்ல நிலையில் குழந்தைகள் பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை - புது உத்தரவால் பீதி!