ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் நாகௌரில் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை கொலை செய்து, அவரது உடலை மறைப்பதற்காக பல துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து நாகௌர் டிஎஸ்பி கீதா சவுத்ரி கூறுகையில், ஸ்ரீ பாலாஜி பகுதியை சேர்ந்த குட்டி (30) என்பவர் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவரும் ஏற்கனவே திருமணமானவருமான அனோபரம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துவந்தனர். அப்போதெல்லாம் குட்டி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு, அனோபரத்திடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அனோபரம் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியாமல் இருந்துவந்துள்ளது.
இந்த நிலையில் குட்டி ஜனவரி 22ஆம் தேதி அனோபரமை சந்திக்க வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. 3 நாள்களுக்கும் மேலானதால் குட்டியின் குடும்பத்தார் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விசாரணையின்போது, அனோபரம் உடனான பழக்கம் தெரியவந்ததால், ஜனவரி 31ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தன. அதாவது ஜனவரி 22ஆம் தேதி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது குட்டி வழக்கம்போல் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அனோபரம் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின் உடலை பல பாகங்களாக வெட்டி பல பகுதிகளில் வீசியுள்ளார் என்பது தெரியவந்தது.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நாகௌரின் பல்வாவில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் குட்டியின் தாடை எழும்புகள், அவரது உடைகள் மற்றும் தலை முடியை கண்டெடுத்துள்ளோம். மற்ற பாகங்களில் சில அதே பகுதியில் உள்ள கிணற்றில் மீட்கப்பட்டுள்ளது. முழு உடலின் பாகங்கள் கிடைக்கவில்லை. அனோபரமை நேரில் அழைத்து சென்று உடல் பாகங்களை மீட்கும் பணி நடந்துவருகிறது. அதோபோல அவர் உடலை வெட்டுவதற்காக பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிலத் தகராறு காரணமாக வெறிச்செயல்.. சார்-பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்த கொடூரம்..