கேரளா: திருவனந்தபுரம் வாழைலா பகுதியில் 50 வயது பெண், அவரது 46 வயது காதலனால் நடுரோட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கிளிமானூரில் ஜூஸ் கடை நடத்தி வருபவர், ராஜேஷ். இவருக்கும் நந்தியோடு பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சிந்துவுக்கும் 12 ஆண்டுகளாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப் இருந்ததாகத் தெரிகிறது.
கடந்த ஒரு மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதனால், சிந்துவை மீண்டும் தன்னுடன் அழைத்துவர ராஜேஷ் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளது. மேலும், சிந்து தன்னிடமிருந்து விலகிச் செல்வதால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
அதன்பேரில், சாலையில் சென்ற சிந்துவை பின்தொடர்ந்து சென்ற ராஜேஷ், அவரது கழுத்தில் மூன்று முறை வெட்டியுள்ளார். இதனைக் கண்ட சாலையில் இருந்தவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதற்கிடையே சிந்துவை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிந்து ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளி ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவலர் போல் பேசி பணம் பறித்த இளைஞர்கள் - அதிரடியாக கைது செய்த கரூர் போலீஸ்