புதுச்சேரி சண்முகபுரம் பாரதிபுரத்தைச் சேர்ந்த மீனவர் சசிகுமார்; இவரது மனைவி அசினாபேகம். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகபுரம் பகுதிவாசிகள் அங்குள்ள வெள்ளவாரி வாய்காலை, சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் நேற்று அதிகாலை கனமழை கொட்டியது. இதில், வெள்ளவாரி வாய்காலில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, அசினாபேகம் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் இருக்க அதனை வேறு இடத்தில் மாற்றி நிறுத்தச் சென்றுள்ளார்.
சில நிமிடங்களில் வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வந்ததால் அசினா பேகம், இரு சக்கரவாகனத்துடன் மழ நீரில் இழுத்து செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் அவரது வாகனம் மட்டும் கரை ஒதுங்கியது. ஆனால் அசினா பேகத்தை காணவில்லை.
வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட அசினாபேகத்தை மேட்டுப்பாளையம், தன்வந்திரி தீயணைப்பு துறையினர் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.