டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்குவது வழக்கம், ஆனால், குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல்கள் காரணமாகக் குளிர்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 29-ஆ தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 23 நாள்கள் நடைபெறும் இந்த தொடரில் பொருட்களின் புவியியல் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்பு திருத்த மசோதா, வர்த்தக முத்திரைகள் திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலத் ஜோஷி,திமுகவின் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, அதிமுக சார்பில் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் கூடும் இந்த குளிர்கால கூட்டத்தொடரில், இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனை, தேர்தல் ஆணையர் நியமனம், உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
இதனிடையே, இன்றைய நாடாளுமன்ற அவை தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தாஜ்மஹால் அருகே இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட இத்தாலிய தம்பதி