கடந்த ஜனவரி 31ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. விவசாயிகள் போராட்டம், மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகின்றன. இதனிடையே, அண்மையில் பெய்த பெருமழையால், தமிழ்நாட்டின் காவிரிப்படுகை வயல்களில் நீர் நிரம்பி, பயிர்கள் அழுகியதால், உழவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து, அரசுக்குத் தெரியுமா? என வைகோ மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமின்றி, சேதம் குறித்த விவரங்களைச் சேகரிக்க, ஏதேனும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா? உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற இழப்பை ஈடுகட்ட, ஏதேனும் உதவிகள் அல்லது பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுமா? என அடுக்கடுக்கான கேள்விகளை வைகோ முன்வைத்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமான பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "அண்மையில் பெய்த பெருமழையில், வயல்களில் நீர் நிரம்பி, பயிர்கள் அழுகியது குறித்த விவரங்களை, தமிழ்நாடு அரசு சேகரித்து அனுப்பியிருக்கின்றது.
அதன் விவரங்கள் பின்வருமாறு:-
தஞ்சாவூர் : 1,06,997.26 ஹெக்டேர்
திருவாரூர் : 50,151.00 ஹெக்டேர்
திருச்சி : 10,821.00 ஹெக்டேர்
நாகப்பட்டினம் : 20,580.40 ஹெக்டேர்
மயிலாடுதுறை : 16,351.90 ஹெக்டேர்
கடலூர் : 45,621.00 ஹெக்டேர்
புதுக்கோட்டை : 43,976.00 ஹெக்டேர்
அரியலூர் : 25,060.34 ஹெக்டேர்
கரூர் : 3,780.11 ஹெக்டேர்
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், பட்டியலிடப்பட்டுள்ள பயிர்களுக்கு, பயிர் அறுவடை சோதனையின் (Crop Cutting Experiment) அடிப்படையில், இழப்பு ஈட்டுத்தொகை வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.