கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக சொந்த கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். தன்னை மிரட்டியவர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே எடியூரப்பா அமைச்சர் பதவி அளித்துள்ளதாக சில பாஜக மூத்தத் தலைவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா இதுகுறித்து கூறுகையில், "பாஜக எம்எல்ஏக்களுக்கு ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், டெல்லிக்குச் சென்று தேசியத் தலைவர்களைச் சந்தித்து என் மீது புகார்கள் அளிக்கலாம். அதற்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கமாட்டேன். ஆனால், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்கிறேன்" என்றார்.
இதில், இறுதி முடிவை தேசியத் தலைவர்களே எடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எடியூரப்பாவை விமர்சித்து வரும் பாஜக மூத்தத் தலைவர் பசனகவுடா ஆர். பாட்டீல் இதுகுறித்து கூறுகையில், "சி.டி.யை வைத்து மிரட்டியவர்களுக்கும் பணம் அளித்தவர்களுக்கும் மட்டுமே எடியூரப்பா அமைச்சர் பதவி வழங்கியுள்ளார்.
சி.டி.யை வைத்து மிரட்டியவர்களில் இருவரை அமைச்சராகவும் ஒருவரை அரசியல் செயலாளராகவும் அவர் ஆக்கியுள்ளார். சாதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. என்னைப் போன்று கட்சிக்கு விசுவாசமாக இருந்தவர்கள், மூத்தத் தலைவர்கள் என எதையும் கருத்தில் கொள்ளாமல் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்து சி.டி.யை வைத்து மிரட்டியவர்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
பாஜக மூத்தத் தலைவர்கள் ஹெச். விஸ்வநாதன், எம்.பி. குமாரசாமி, சதீஷ் ரெட்டி, சிவானகவுடா நாயக், திப்பரெட்டி, ரேணுகாச்சார்யா எனப் பல்வேறு தலைவர்கள் எடியூரப்பாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்டிபி நாகராஜ், சி.பி. யோகேஷ்வர், சுயேச்சை வேட்பாளராக வெற்றிபெற்று காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியின்போது அமைச்சராக இருந்த ஆர். சங்கர், உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவலி, முருகேஷ் நிரானி, எஸ். அங்காரா ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதில், உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவலி, முருகேஷ் நிரானி ஆகியோர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர்கள் எனக் கூறப்படுகிறது. பாஜக உட்கட்சி பூசலை விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் டி.கே. சிவகுமார், மிரட்டியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.