பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவராக வரலாற்றில் முதன்முதலாக இந்திய வம்சாவளி பெண்ணான ராஷ்மி சமந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். யூதர்களுக்கு எதிராக அவர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், ஐந்தே நாள்களில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ராஷ்மியை குறிவைத்து சமூக வலைதளங்களில் இனவாத கருத்துகள் பரப்பப்பட்டதாக பாஜக எம்பி அஸ்வின் வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், "ராஷ்மியை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் கருத்து பரப்பப்பட்டது. அவர் பெற்றோரின் இந்து மத கருத்துகளை பொதுவெளியில் கல்லூரியின் ஆசிரியரே தாக்கி பேசினார்" என்றார்.
இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "தேவைப்படும்போது, நடந்ததாக குற்றம்சாட்டப்படும் இனவாத பிரச்னையை பிரிட்டனிடம் எழுப்புவோம். இது மகாத்மா காந்தியின் நாடு. இனவாத பிரச்னையை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க முடியாது.
பிரிட்டனுடன் இந்தியா நல்லுறவையே பேணுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை தேவைப்படும்போது வெளிப்படையாக எழுப்புவோம். உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறேன். குறிப்பாக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் அந்நாட்டில் வாழ்கின்றனர்" என்றார்.