இந்தியா முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இத்திட்டம் இந்தாண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது.
முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், சுகாதாரத் துறையினருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் உள்ள 45 வயதைத் தாண்டியவர்களுக்கும் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது இளம் வயதினரை கரோனா அதிகம் தாக்கும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மே 5ஆம் தேதி தொடங்கவிருப்பதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 6ஆம் கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட தேர்தல் பரப்புரையில் மம்தா ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று தக்ஷின் தினாஜ்பூரில் நடந்த பேரணியில் மம்தா பேசியதாவது:'மே 5ஆம் தேதிக்குப் பின்னர் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்து விடும். அதன் பின்னர், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எந்த செலவும் இன்றி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். கரோனா தடுப்பூசிக்கான முழு செலவையும் மாநில அரசு ஏற்கும்.
மேலும், கரோனா பாதிப்பு அதிகரிப்பதை சமாளிக்க நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருகிறது. போதுமான ஆக்ஸிஜனை வழங்குவதோடு, படுக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன'என்றார்.