பெங்களூர்: காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அண்மையில், அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், காவிரியின் உபரிநீரைப் பயன்படுத்த தமிழ்நாட்டை அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் (பிப்ரவரி 21) அடிக்கல் நாட்டியுள்ள நிலையில், காவிரிப் பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. தென்மாவட்டங்கள் பயனடையும் வகையில், 14,440 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு எதிராக தங்களது கருத்துகளை மத்திய அரசிடம் எடுத்துவைப்போம் என நேற்று எடியூரப்பா பேசியுள்ளார். கர்நாடகா மாநில நீர்ப்பாசன அமைச்சர், இந்தத் திட்டம் தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் ஆளும் கட்சி, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் சட்டவிரோதமானது என விமர்சித்துள்ள கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமய்யா, இந்தத் திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் எடியூரப்பா கேள்வி எழுப்ப வேண்டும் எனவும், இத்திட்டத்தைக் கைவிட தமிழ்நாடு அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி, கர்நாடக அரசின் கவனத்துக்கு வராமலேயே இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசு இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதையும் அவர் கண்டித்துள்ளார்.
உபரி நீர் கிடைக்காது என்பதால் தமிழ்நாடு அரசு மேகதாது அணை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவிப்பதாகச் சுட்டிக்காட்டிய குமாரசாமி, தமிழ்நாட்டை ஒரு சொட்டு உபரிநீர்கூட பயன்படுத்த விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மொழிவாரியாக பிரிவினை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கிறதா?