புதுச்சேரி : புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சிஸ் நிறுவனம் இணைந்து ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கு "ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாக "ஒத்த செருப்பு அளவு 7" என்கிற தமிழ் திரைப்படத்திற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 15) நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், அம்மாநில வருவாய்துறை அமைச்சர் ஷாஜகான் ஒத்த செருப்பு படத்தின் நடிகரும், இயக்குநருமான பார்த்திபனுக்கு விருதினையும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசையும் வழங்கி கவுரவித்தார்.
இதன் பின்னர் மேடையில் உரையாற்றிய பார்த்திபன், "விழாவில் ஒரு குத்து விளக்கு ஏற்ற பல குச்சிகள் தேவைப்படுகின்றன. அஜித், விஜய் படங்கள் பரபரப்பாக ஓடும் காலத்தில் ஒத்த செருப்பு போன்ற படங்கள் தோல்வி அடைந்ததை கண்டு நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். தோல்விகளால் துவண்டு போக வேண்டாம். தோல்வியால் ஏற்படும் மன உளைச்சலால் தற்கொலை போன்ற முடிவுகளுக்கு செல்ல கூடாது.
ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பதற்கு முன்பே புதிய காட்சிகளை தொடங்கும் நேரம் என டுவீட் செய்திருந்தேன். நடிகர் விஜயும் அரசியலுக்கு வருவார் எனக் கூறினார்கள். நானும் ஒரு கட்சி தொடங்கலாம் என நினைக்கிறேன். எனது கட்சியின் பெயர் புதிய பாதை" எனத் தெரிவித்தார். பின்னர் தான் நகைச்சுவைக்காக கட்சி குறித்து கூறியதாக தெளிவுப்படுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "புதுச்சேரியில் கரோனாவிற்கு பிறகு திரைப்பட படப்பிடிப்புக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இதனை குறைக்க வேண்டும். தனது அடுத்த படம் இரவின் நிழல். ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படம். உலகத்தில் யாரும் இப்படி சிங்கில் சாட்டில் படம் எடுத்ததில்லை" எனப் பேசினார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "சிறந்த படமான இதற்கு விருது கிடைக்காத போது கோபம் வந்தது. தற்போது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினியுடன் கமல் இணைவது தொடர்பாக பல குழப்பங்கள் நிலவுகின்றன. அதனால் நானும் கருத்தை கூறி குழப்ப விரும்பவில்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் குழப்பமாக இருக்கிறார்கள். எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. நிச்சியமாக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். நான் மட்டுமல்ல நிறைய இளைஞர்கள் வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: யூடியூப்பில் வெளியான கொம்பு திரைப்படம் - சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் புகார்