லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், தாகூர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர், முன்னா. அதே பகுதியைச் சேர்ந்த சல்மா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே கணவனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சல்மா தன் குழந்தையுடன் தாய் வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது.
மனைவியை வீட்டிற்கு வருமாறு முன்னா பலமுறை அழைத்தும், சல்மா வராமல் தட்டிக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொண்டும் சல்மா மசியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே வெள்ளிக்கிழமை(ஜன.27) அன்று தன் மாமியார் வீட்டிற்கு சென்ற முன்னா, தன் குழந்தையோடு விளையாடியுள்ளார்.
இதைக் கண்டித்த சல்மா, குழந்தையை சந்திக்க வரக்கூடாது என முன்னாவை கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் சல்மாவை வீட்டிற்கு வருமாறு முன்னா அழைத்ததாகவும், அதற்கு அவர் வர முடியாது என தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், முன்னாவை தாக்கிய சல்மா, திடீரென அவரது நாக்கை தன் பற்களால் கடித்து வெளியே துப்பியுள்ளார். முன்னாவின் நாக்கு துண்டாக அறுபட்ட நிலையில், ரத்தம் வெளியேறி அப்படியே சரிந்து விழுந்தார். சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சல்மாவை கைது செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்குவாதத்தில் கணவரின் நாக்கை மனைவி கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 2023 மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு என்ன இருக்கிறது!