தெலங்கானா மாநிலம் ஜாக்டியல் பகுதியைச் சேர்ந்த தம்பதி கஞ்சி ரம்பாபு(45 ), அவரது மனைவி லாவண்யா(40). இவர்கள் இருவருக்கும் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் (தீநுண்மி) வேகமாகப் பரவிவரும் நிலையில் தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனக் கருதி இருவரும் சோதனை செய்துள்ளனர். அதில் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், லாவண்யா தனது பெற்றோரைத் தொடர்பு கொண்டு இருவருக்கு கரோனா தொற்று உள்ளதால் சிகிச்சைக்காக கரீம்நகர் மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார். இதையடுத்து மகளைக் காண லாவண்யாவின் பெற்றோர் மருத்துவமனைக்கும் சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் இல்லை. தொலைப்பேசி தொடர்பு கொண்டும் எந்த பதிலுமில்லை.
லாவண்யாவின் பெற்றோர் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் சென்ற காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் தம்பதியினர் இருவரும் மகாராஷ்டிராவில் 10 ஆண்டுகள் வசித்து வந்தனர். அவர்கள் 10 மாதங்களுக்கு முன்பு ஜாக்டியலுக்கு வந்தனர். கரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக மகாராஷ்டிராவுக்குச் செல்லாமல் இங்கே இருந்துள்ளனர். இருப்பினும் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இவர்களின் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.