சென்னை: ஒருவர் ஆடை மற்றும் அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கும்போது அதன் நிறம், அழகு மற்றும் விலையைத்தான் பார்த்து வாங்குகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் நீங்கள் வாங்கும் காலணிகளுக்கும் இதே ஃபார்மலாவை பயன்படுத்தினால் அது உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
உங்கள் ஒட்டுமொத்த எடையையும் தாங்கி பிடிப்பது கால்கள் என்றால் அந்த கால்கள் பூமியில் ஊன்றி நீர்க்கும்போது அதைப் பாதுகாப்பது காலணிகள்தான். அந்த காலணிகளை நீங்கள் தேர்வு செய்யும்போது நிறம், விலை மற்றும் அழகு எல்லாம் கடந்து உங்கள் பாதங்களுக்குப் பாதுகாப்பானதா என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
காலணிகளின் வகைகள்; பிறந்த குழந்தை முதல் ஆண், பெண் என இருபாலருக்குமான காலணிகள் சந்தைகளில் கொட்டிக்கிடக்கின்றன. சப்பல், ஷூ உள்ளிட்ட பல்வேறு வகைகளில் இருக்கும் காலணிகள் பெண்களுக்கென்று வரும்போது அதன் அழகு, வடிவமைப்பு நிறம் உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தயாரிக்கப்படுகிறது. 50 ரூபாய் காலணி முதல் லட்சங்கள் வரை மதிப்புள்ள காலணிகள் இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக மிகப்பெரும் செலிபிரிட்டிகள் லட்சங்கள் மற்றும் கோடிகள் மதிப்புள்ள காலணிகளை நாள் ஒன்றுக்கு ஒரு செருப்பு என அணிவதையும் செய்திகள் வாயிலாகக் கேட்டிருப்போம். ஸ்போட்ஸ், உடற்பயிற்சி என்று வரும்போது அதற்குத் தகுந்தார்போல் ஷூக்கள் அணிவதும் வேலைக்குச் செல்ல, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல, வீட்டிற்குப்போட, கால் வலி உள்ளவர்களுக்குத் தனியாக, நோயாளிகளுக்குத் தனித்துவமாக எனக் காலணிகள் வகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
காலணிகளை நீங்கள் சரியாகத் தேர்வு செய்யாதபோது வரும் பிரச்சனைகள்; உங்கள் கால்களுக்கு உகந்த காலணிகளை நீங்கள் தேர்வு செய்யவில்லை என்றால்,அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகை செய்யும். குறிப்பாக முதுகுவலி, முழங்கால் வலி, குதிங்கால் வலி, கல் விரல்களில் ஒவ்வாமை மற்றும் புண் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகை செய்யும். உங்கள் அன்றாட பணிகளைச் சரியாகச் செய்ய முடியாத சூழல் ஏற்படலாம். மேலும் இதனால் மன அழுத்தம் வரலாம்.
நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்; அதிலும் குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் காலணிகளைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். ஏன் என்றால், அவர்களின் கால் பகுதியில் ஏதேனும் சிறிய காயம் ஏற்பட்டால்கூட அது நீண்ட நாள் ஆறாமல் மிகுந்த தொந்தரவுக்கு வழிவகை செய்யும். சில நேரங்களில் அதன் காரணமாகக் கால் அல்லது கால் விரல்களை அகற்றும் நிலைகூட ஏற்படலாம்.
ஹை ஹீல் வைத்த காலணிகளை அணிகிறீர்களா.? பெண்களுக்கு பொதுவாக ஒரு பார்ட்டி, ஃபங்ஷன் எனப் புறப்பட வேண்டும் என்றாலும் சரி, உயரம் கொஞ்சம் குறைவாக இருக்கிறார்கள் என்றால் அதை சரிக்கட்டவும் முதலில் தேர்வு செய்வது ஹை ஹீல் வைத்த காலணிகள்தான். இந்த காலணிகள் உங்கள் தோற்றத்தை வேண்டுமானால் அழகாக்கலாம் ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும்.
ஹை ஹீல் வகை காலணிகளை நீங்கள் தொடர்ந்து அணியும்போது கணுக்கால் வலி, நரம்பு இழுத்துப் பிடித்தல், எலும்பு தேய்மானம், முதுகு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். ஏன் என்றால் நீங்கள் ஹை ஹீல் காலணிகளை அணியும்போது உங்கள் ஒட்டுமொத்த எடையையும் கால்களின் முன்பகுதி தாங்கி பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை சரிகட்ட நீங்கள் உங்கள் முதுகை வளைத்து நிற்க வேண்டும். இப்படி உங்கள் உடலுக்கு ஏற்படும் அசவுகரியங்களால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
கால்களுக்கு உகந்த காலணிகளைத் தேர்வு செய்வது எப்படி; கால்களுக்கு உகந்த காலணி என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டதுதான். ஆனால் பொதுவான சிலவற்றை என்னவென்றால், நீங்கள் காலணிகளை வாங்கச் செல்லும்போது குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அதற்காக ஒதுக்குங்கள். நிதானமாகப் பார்த்து வாங்குங்கள். காலணியைப் போட்டுப் பார்க்கும்போது உட்காராமல் நின்று கால்களை நேராக வைத்துப்போட்டுப் பாருங்கள்.
உங்கள் கால் எவ்வித அசவுகரியத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டும். அதேபோல், மிகவும் கடினமான காலணிகளைத் தேர்வு செய்யாதீர்கள், அது உங்கள் கால்களுக்கு வலியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மென்மையான காலணிகளைத் தேர்வு செய்யுங்கள். மழைக்காலம் மற்றும் வெயில் காலம் என்று வரும்போது அதற்குத் தகுந்தார்போல் காலணிகளைப் பயன்படுத்துங்கள். காலணிகள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் பாதுகாவலன் என்பதை மனதில் கொள்ளுங்கள். ஆரோக்கியமுடன் வாழுங்கள்.
இதையும் படிங்க: உதடு பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா.? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!