பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ நீத்து சிங். அவரிடம் ராகுல் காந்தியின் பறக்கும் முத்தம் தொடர்பான சர்ச்சை குறித்து ஈடிவி பாரத் ஊடகம் பிரத்தியேக பேட்டி எடுத்து உள்ளது. அப்போது பேசிய நீத்து சிங், 50 வயது பெண்ணுக்கு ஏன் எங்கள் தலைவர் பறக்கும் முத்தம் கொடுக்கப் போகிறார் அவருக்கு வேறு பெண்ணா கிடைக்காது எனவும், இதுபோன்ற கொச்சையான அரசியல் செய்ய பாஜகவும், ஸ்மிருதி இரானியும் வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய நீத்து சிங், வயதான பெண்ணிற்கு ராகுல் காந்தி முத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவருக்கான பெண் வேண்டும் என்றால் அதற்கு இங்கு பஞ்சம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய நீத்து சிங், ராகுல் காந்தியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவினர் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களைச் செய்கிறார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான உறுப்பு வன்முறை கொடுமையானது - மணிப்பூர் கமிட்டியின் அறிக்கையை தாக்கல் செய்ய 2 மாத கால அவகாசம்!
மேலும், மக்களவை விவாதத்தின் போது வெளியான வீடியோவை அனைவரும் பார்த்திருப்பீர்கள் எனக்கூறிய நீத்து சிங், ராகுல் காந்தியின் பேச்சும், கை அசைவும், சபாநாயகரை நோக்கி மட்டும்தான் இருந்தது எனக் குறிப்பிட்ட நீத்து சிங், அந்த நேரத்தில் ஸ்மிருதி இரானிக்கு அவர் எங்கிருந்து பறக்கும் முத்தம் கொடுத்தார் என்று தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இது போன்ற குற்றச்சாட்டை முன்வைக்க ஸ்மிருதி இரானி வெட்கப்பட வேண்டும் எனவும் நீத்து சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், மக்களவையில் இதுபோன்ற அநாகரீக செயலை ராகுல் காந்தி செய்தார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த ஸ்மிருதி இரானி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தோழியின் கணவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவருக்கு நீத்து சிங் அறிவுறுத்தியுள்ளார். இவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், அரசியல் ரீதியாகப் பலரும் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
முன்னதாக நேற்று முன் தினம் மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவரை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரதமர் மோடி அரசுக்கு ஆதரவாகப் பல கருத்துக்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை முடியும் நேரத்தில் ராகுல் காந்தி பாஜக பெண் எம்.பி-க்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார் என்ற சர்ச்சை கருத்து வெளியாகிப் பரபரப்பானது. இது தொடர்பாகப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் பீகார் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் ஈடிவி பாரத்திடம் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: "மணிப்பூர் பற்றி எரியும்போது, சிரிப்பதும், கேலி செய்வதும் பிரதமருக்கு அழகல்ல" - ராகுல்காந்தி ஆவேசம்!