புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த 7ஆம் தேதி ரங்கசாமி மட்டும் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.
கடந்த 9ஆம் தேதி மூத்த சட்டப்பேரவை உறுப்பினரான லட்சுமிநாராயணன், தற்காலிக சபாநாயகராகப் பரிந்துரைத்து, அதற்கான கடிதத்தை ஆளுநருக்கு ரங்கசாமி அனுப்பி இருந்தார். ஆனால், ஆளுநரை நியமிப்பதற்கான நியமன உத்தரவு இதுவரை வெளியாகவில்லை.
கரோனாவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ரங்கசாமி, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று முன் தினம் (மே.17) புதுச்சேரி திரும்பினார். வழக்கமாக, தற்காலிக சபாநாயகர் சட்டப்பேரவையைக் கூட்டி உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
பாஜக துணை முதலமைச்சர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள், சபாநாயகர் பதவியைக் கோரி வருகிறது. ஆனால், ரங்கசாமி இதற்கு சம்மதிக்கவில்லை. இரண்டு அமைச்சர், துணை சபாநாயகர் பதவியையே பாஜகவுக்கு தர ரங்கசாமி முன்வந்துள்ளார்.
தேர்தல் முடிவு வெளியாகி 15 நாட்கள் கடந்தும், உறுப்பினர்கள் பதவி ஏற்க முடியவில்லை. இதனால் அமைச்சரவை உருவாக்குவதில் இழுபறி நிலவுகிறது. மோதல் காரணமாக தற்காலிக சபாநாயகர் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க : தமிழினப்படுகொலை நாள்: வீடுகளிலேயே வீரவணக்கம் செலுத்த பழ. நெடுமாறன் வேண்டுகோள்