பார்படோஸ் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சனின் ஜெர்சி அணிந்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாக மாறிய நிலையில், பிசிசிஐ தரப்பில் அதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த ஜூலை 27ஆம் தேதி தொடங்கியது.
பார்படோஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், மற்றொரு வீரர் சஞ்சு சாம்சனின் ஜெர்சி அணிந்து விளையாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாக மாறியது.
மேலும், இந்திய வீரர்களுக்கு ஜெர்சி வழங்குவதற்குக் கூட கோடிக்கணக்கிலான ரூபாய் பணத்தில் புரளும் பிசிசிஐக்கு வசதி இல்லையா என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்டு வந்தனர். சஞ்சு சாம்சனுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும், நிலையில் அதை விமரிசித்து வந்தவர்கள் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கினர்.
சஞ்சு சாம்சனின் ஜெர்சி அணிந்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கியது, சாம்சனின் ரசிகர்களை மேலும் வெறுப்படையச் செய்தது. எதற்காக சஞ்சு சாம்சனின் சீருடையில் களமிறங்கினார் என்கிற கேள்வியும், கிண்டல்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின. இந்நிலையில், சஞ்சு சாம்சனின் ஜெர்சியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்கியதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
சூர்யகுமார் யாதவின் ஜெர்சி அளவு சிறியதாக இருப்பதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்ததாகவும் இருப்பினும், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு அவருக்கு ஜெர்சி சரி செய்து தரப்படவில்லை என்று கூறப்பட்டு உள்ளது. சூர்யகுமார் யாதவிற்காக புதிய ஜெர்சி டி20 போட்டியில் விளையாட வரும் இந்திய அணியுடன் அனுப்பி வைக்கபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அவர் மற்ற வீரரின் ஜெர்சியில் தான் விளையாட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி விரைவில் வர உள்ள அவர்களிடம் சூர்யகுமார் யாதவ் மற்றும் மற்ற வீரர்களுக்கான ஜெர்சி உள்ளிட்டவைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பார்படோஸ் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் சஞ்சு சாம்சனின் டீ - சர்ட்டில் சூர்யகுமார் யாதவ் விளையாடினார்.
ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரே வீரரின் பெயர் பொறித்த ஜெர்சியை எதிரெதிர் முனையில் இருந்த இரண்டு வீரர்கள் போட்டுக் கொண்டு விளையாடியது பெவிலியனில் இருந்த மற்ற இந்திய வீரர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : Ashes Test: இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை!