ஐதராபாத் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி கேப்டனின் விக்கெட்டை வீழ்த்திய போது ஒரு சில விநாடிகள் தலையில் ஒற்றை விரலை வைத்து இங்கிலாந்து கால்பந்து வீரர் போல் செய்து காட்டியதற்கான காரணம் குறித்து ஜஸ்பிரித் பும்ரா விளக்கம் அளித்து உள்ளார்.
கடந்த 11ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா (131 ரன்) சதத்தின் உதவியுடன் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக போட்டி நடந்து கொண்டு இருந்த போது, ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதியின் விக்கெட்டை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா வீழ்த்தினார். அவரது விக்கெட் வீழ்த்திய பின் ஒரு சில விநாடிகள் தலையில் ஒற்றை விரலை வைத்தவாறு பும்ரா நின்றார்.
இங்கிலாந்து கால்பந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு போன்று பும்ரா இமிடேட் செய்து காட்டியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட கிரிக்கெட் ரசிகர்கள், இதற்கு ஏதும் முன்கதை உள்ளதா என தொடர்ந்து வினாவி வந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த 14ஆம் தேதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, பும்ரா பெண் தொகுப்பாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது, இங்கிலாந்து கால்பந்து வீரர் போன்று இமிடேட் செய்து காட்டியது ஏன் என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பும்ரா, கொண்டாட்டத்தில் ஈடுபடும் பொழுது, தனக்கு இங்கிலாந்து கால்பந்து வீரர் ராஷ்போர்டு ஞாபகம் வந்ததாகவும் அவர் செய்வது போலவே தலையில் கை வைத்து செய்தேன் என்றும் தெரிவித்தார். அது அருமையான உணர்வாக இருந்ததாகவும் மற்றபடி இந்த கொண்டாட்டத்திற்கு பின்னால் எந்த கதையும் கிடையாது என்று அதை வெகு இயல்பாகவே செய்தேன் என்றும் பும்ரா கூறினார்.
காயம் காரணமாக நீண்ட நாட்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ள பும்ரா உலக கோப்பை கிரிக்கெட்டில் கட்டுக்கோப்பாக பந்துவீசி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 39 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐசிசி போட்டியா..? இல்ல பிசிசிஐ போட்டியா? - பாக். அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் அதிருப்தி..!