டெல்லி: நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டுகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள், சுகாதாரத் துறையினர் எனப் பலருடன் மத்திய அரசும் பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துவருகின்றனர்.
இந்நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துவரும் நடவடக்கைகள் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அதில், "உலகளவில் ஆக்சிஜன் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவது ஏன்? கரோனா முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையில் சுமார் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் இருந்தன. இதற்கிடையில் கரோனா இரண்டாம் அலை உருவாக வாய்ப்புள்ளது எனக் கூறிய அனைத்துப் புள்ளி விவரங்களையும் அரசு புறக்கணித்ததன் விளைவே மக்கள் தற்போது பாதிப்பிற்குள்ளாவதற்கு காரணமாக உள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் 1.1 மில்லியன் ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் இன்று, மக்கள் தடுப்பு மருந்து பற்றாக்குறையால் தவிக்கின்றனர்.
துபாயில் உள்ள ஐஎஸ்ஐ அமைப்புடன் எல்லாம் பேச்சுவார்த்தை நடத்த முடிந்த மத்திய அரசால் ஏன் இங்குள்ள எதிர்க்கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை?
கரோனா பரவல் கைமீறிச் சென்ற நிலையிலும் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு புறக்கணிப்பது ஏன்? எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும் ஆக்கப்பூர்வமான செயல்முறைகளை அளிக்கவே விரும்புகிறோம்.
இதுவரை யாரும் நேர்மறையற்ற ஆலோசனைகளை வழங்காமல் இருந்ததாக நான் எண்ணவில்லை. இருப்பினும் மத்திய அரசு எங்களைப் புறக்கணிப்பதற்கான காரணம் என்ன?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.