ஐதராபாத்: சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாக அடிவைத்து இந்திய மக்கள் அனைவருக்கும் பெருமையைத் தேடித் தந்தது மட்டுமல்லாமல், அனைவருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது எனலாம். இதனால் இந்தியராக உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
அதாவது நிலவில் சென்று ஆராய்ச்சி நடத்துவதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா என்ற நாடுகளின் பட்டியலில் 4வது நாடாக தற்போது இந்தியாவும் இணைந்து உள்ளது. சொல்லப்போனால், வல்லரசு நாடுகளே செல்ல முடியாத நிலவின் தென் துருவத்தை சந்திரயான் -3 திட்டம் மூலம் இந்தியா சென்று சாதித்துள்ளது.
நிலவிற்கு செல்ல பல தோல்விகளை சந்தித்த இஸ்ரோ விடாமுயற்சியை மட்டும் கைவிடவில்லை. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் நிலவில் இந்தியாவின் கொடியை நாட்ட சந்திரயான் 1 விண்கலம் நிலவை நோக்கி புறப்பட்டது. அந்த திட்டத்தின் மூலம் நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன.
இதன் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை கண்டுபிடித்து உலக அரங்கில் ஒலித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் சந்திரயான் 1 விண்கலம் இயங்க வேண்டி இருந்த நிலையில், தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக 300க்கும் மேற்பட்ட நாட்கள் மட்டுமே நிலவில் பயணித்தது.
தொடர்ந்து சந்திரயான் 2 திட்டத்திற்கான வேலையில் இஸ்ரோ மும்மரமாக இறங்கியது. அதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். விஞ்ஞானி சிவன் தலைமையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஆனால் சந்திரயான் தரையிரங்கும் நேரத்தில் ரோவர் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவின் மேற்பரப்பில் மோதி வெடித்துச் சிதறியது. இரண்டாம் கட்ட முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனால் துவண்டுபோன விஞ்ஞானிகள் முயற்சியை மட்டும் கைவிடவில்லை.
சந்திரயான் 2 திட்டத்தையே முன்னுதாரனமாக வைத்து அதில் இருந்த தவற்றை எப்படி சரி செய்வது, அதில் என்ன மாற்ற கொண்டு வர வேண்டும்? என்ன சேர்க்க வேண்டும்? ஒருவேளை ஏதேனும் கருவி தோல்வியடையும் பட்சத்தில் அதற்கு மாற்று கருவியை பொருத்துவது எப்படி? என பல கோணங்களில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியைத் துவங்கினர்.
இந்த சந்திரயான் 3 திட்டத்திற்கு மீண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார். கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதையை கடந்து நிலவில் அடிவைக்க சந்திரயான் எடுத்துக் கொண்ட கால அளவு சுமார் 45 நாட்கள் ஆகும்.
திட்டமிடப்படி ஆகஸ்ட். 23ஆம் தேதி, தனது சுற்றுப்பயணத்தை முடித்த சந்திரயான் 3 விண்கலம், இந்திய மக்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நிலவில் அதன் விக்ரம் லேண்டரை தரையிறக்கியது. அனைவரும் சந்திரயான் 2 தோல்வியைத் தழுவியது எனக் கூறுகின்றனர். ஆனால் சந்திரயான் 3 வெற்றிக்கு முழு காரணமே சந்திரயான் 2 தான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஏனெனில், சந்திரயான் 2 தரையிரங்கும் பட்சத்தில் வேகமாக இறங்கியதால் தான் வெடித்ததே தவிர வேறு எந்தவித பிரச்சனையும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சந்திரயான் 3 திட்ட இயக்குநராக செயல்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் (வயது 41) ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியது, "எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த மயில்சாமி அண்ணாதுரைக்கு நன்றி. தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் விஞ்ஞான பொறியாளராக பணி புரிந்து வருகின்றேன். நான் பிறந்து வளர்ந்து எல்லாம் விழுப்புரத்தில் தான்.
விழுப்புரம் இரயில்வே பள்ளியில் தான் 10 வரை படித்தேன், பள்ளியில் படிக்கும் போது சராசரியாக படிக்கும் மாணவன் தான். பள்ளிப் படிப்புக்கு பிறகு என்ன படிக்க வேண்டும் என எந்த ஒரு ஐடியாவும் இல்லை. குடும்பத்திலும் யாருக்கும் கல்விப் பின்னணி கிடையாது. நண்பர்களுடன் இணைந்து, டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன்.
அதனைத் தொடர்ந்து இன்ஜினியரிங் மேல் வந்த ஆர்வத்தின் காரணமாக 90 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. அதனைத் தொடந்து, மெரிட்டில் பிஇ இளங்கலை பட்டப்படிப்பில் இணைந்தேன். அனைத்து தேர்விலும் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருப்பேன். இப்படி வருவதற்காக அனைத்து நேரங்களிலும் படிக்க மாட்டேன்.
ஆனால் ஒரு முறை படிக்கும் போது புரிந்து படிக்க வேண்டும் என நினைத்து படிப்பேன். அதுவே எனக்கு நல்ல மார்க்கை வாங்கிக் கொடுத்தது. அதையடுத்து திருச்சியில் எம்இ. பட்டப்படிப்பில் இணைந்தேன், பி.இ பட்டப்படிப்பை போலவே எம்இ. படிப்பிலும் நன்றாக படித்தேன். பின்னர் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கோவையில் உள்ள லக்ஷ்மி மிஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினியராக சேர்ந்தேன்.
வேலை செய்யும் போதே விண்வெளி ஆராய்ச்சி மீது மிகப்பெரிய ஆர்வம் வந்தது. அப்போது தான் பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். அங்கிருந்து இஸ்ரோவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து பணியில் சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து பல வெற்றி.
நான் ஒரு சாதாரண மனிதன் என்னால் முடியும் என்றால் அனைவராலும் நிச்சயம் முடியும். என்னைப் பொருத்தவரை, self discipline, 100% involvement, without any expectation, hard working and uniqueness இது நிச்சயமாக வெற்றியைத் தரும்" என எதிர்கால தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த வீடியோவை வீரமுத்துவேல் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: சந்திராயன்-3 திட்டத்தின் இயக்குநராக விஞ்ஞானி வீரமுத்துவேல் நியமனம்!