பெங்களூரு: கர்நாடக மாநில ஒரே கட்டமாகக் கடந்த 10-ஆம் தேதி புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 73.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
இதற்காக 34 இடங்களில் 36 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4,256 மேஜைகள், 4,256 ஊழியர்கள், 4,256 ஊழியர்கள், 4,256 நுண் கண்காணிப்பாளர்கள் உட்பட 13,793 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவிடுக்கின்றனர். இதுதவிர வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு போடப்பட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவைப் பொறுத்தவரையில், பிரதான கட்சிகளாக விளங்கும் பாரதிய ஜனதா கட்சி(BJP), காங்கிரஸ்(Congress) மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்(JDS) இடையே மும்முனை போட்டி நிலவியது. பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 09 தொகுதிகளும் போட்டியிட்டனர். ஆளுங்கட்சியாக உள்ள பாஜக ஆட்சியைத் தக்க வைக்கவும், எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
கர்நாடாவை பொறுத்தவரை பாஜக ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் அதனால் நாங்கள் குறைந்தபட்சம் 130 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைப்போம் என அம்மாநில முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை கூறியுள்ளார். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அடுத்த முதல்வராகப் பார்க்கப்படும் டி.கே.சிவக்குமார், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 140 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி எனக் கூறியுள்ளார்.
ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 113 என்ற மேஜிக் நம்பர் கிடைக்க வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு சில நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளில் மட்டும் காங்கிரஸ் கட்சி சுமார் 110 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெச்.டி.குமாரசாமியின் திட்டம்?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி குமராசாமியின் ஜேடிஎஸ் சராசரியாக 25 இடங்களை கைப்பற்றும் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் ஜேடிஎஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இரு கட்சிகளும் முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி குமராசாமியும் மீண்டும் கர்நாடகாவில் முதல்வர் ஆகும் திட்டத்தில் இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. கர்நாடக தேர்தல் என்பது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் பாஜக குமாரசாமியின் நிபந்தனைகளை ஏற்று அவருடன் கூட்டணி ஆட்சி அமைக்கவும் தயங்காது என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: Karnataka Exit Poll: கர்நாடகாவில் யார் ஆட்சி? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!