ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளில் கரன்பூர் தவிர்த்து மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்த நிலையில் அங்கு தேர்தல் தள்ளிவைக்கபப்ட்டது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பெரும்பான்மைக்கு 101 தொகுதிகள் தேவைப்பட்டதில், பாஜக 115 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவாரம் தாண்டிய நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்தது.
முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே, மகந்த பாலக்நாத் உள்ளிட்டோர் முதலமைச்சர் ரேசில் முன்னணியில் இருந்தனர். இந்நிலையில், இன்று (டிச. 12) ஜெய்ப்பூரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பிரகலாத் ஜோஷி, பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீவிர ஆலோசனைக்கு பின்னர் ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். 56 வயதான பஜன்லால் சர்மா, சங்கனர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கனர் தொகுதியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 162 வாக்குகள் பெற்ற பஜன்லால் சர்மா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர பரத்வாஜ் என்பவரை விட 48 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
எம்.எல்.ஏ.க்கு முன்னர், பஜன்லால் சர்மா ராஜஸ்தான் மாநில பாஜக பொதுச் செயலாளராக பதவி வகித்து உள்ளார். முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ள பாஜன்லால் சர்மா, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டது சொந்த கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் ராம் மெக்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஸ்வினி வைஷ்ணவ், முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே, தியா குமாரி, ராஜ்யவர்தன் சிங் ராத்தோர், பாபா பாலாக்நாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முதலமைச்சர் ரேசில் முன்னணியில் உள்ள நிலையில், அவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு பஜன்லால் சர்மா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு உள்ளது பொது மக்கள் மட்டுமின்றி சொந்த கட்சியினர் மத்தியிலும் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த சட்டமன்ற குழு கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே, முதலமைச்சராக பஜன்லால் சர்மாவை முன்மொழிந்த நிலையில் மற்ற உறுப்பினர்கள் அதை அமோதித்ததாகவும், இறுதியில் பஜன்லால் சர்மா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1993 ஆம் ஆண்டு ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் அரசியலில் முதுகலை பட்டம் முடித்த பஜன்லால் சர்மா, வேட்புமனுத் தாக்கலின் போது ஒரு கோடியே 46 லட்ச ரூபாய் மதிப்பில் சொத்துகள் வைத்திருப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும், பஜன்லால் சர்மா மீது ஒரு கிரிமினல் வழக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு! சட்டமன்ற குழு கூட்டத்தில் முடிவு!