கொப்பலா(கர்நாடகா): கர்நாடகாவில் மாணவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராடும் வகையில், கடந்த நவம்பர் 23ஆம் தேதி பிதார், ராய்ச்சூர், கலபுர்கி, யாத்கிர், கொப்பால்(கொப்பலா), பல்லாரி மற்றும் விஜயபுரா ஆகிய 7 மாவட்ட மாணவ - மாணவியர்களுக்கு முட்டை வழங்கப்படும் என அம்மாநில பாஜக அரசு அறிவித்தது.
இதற்கு லிங்காயத் மற்றும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் கொப்பால்(கொப்பலா) மாவட்டத்தில் உள்ள கங்காவதி என்னும் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, ஏழைக் குழந்தைகளுக்கு சத்தான உணவைத் தரமறுக்கும் நபர்களை எதிர்த்துப் பேசிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாங்கள் எந்த உணவைச் சாப்பிடவேண்டும் எனச் சொல்ல நீங்கள் யார்?
அந்தக் காணொலியில் அச்சிறுமி கூறியதாவது, 'இது நல்லது என்று நினைக்கிறீர்களா? இப்படி ஒரு நிகழ்வு உங்கள் குழந்தைகளுக்கு நடந்தால், நடப்பது சரி என்று நினைப்பீர்களா... எங்களுக்கு முட்டை மற்றும் வாழைப்பழங்கள் தேவை. இல்லாவிட்டால், நாங்கள் உங்கள் லிங்காயத் மடத்துக்கே வந்து அங்கேயே முட்டை சாப்பிடுவோம்.
ஒரு முட்டை அல்ல; இரண்டு முட்டை சாப்பிடுவோம். நாங்கள் எந்த உணவைச் சாப்பிடவேண்டும் எனச் சொல்ல நீங்கள் யார்? நாங்கள் முட்டை சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு உங்களைப் பிரார்த்திக்கவில்லையா?
நீங்கள் ஏன் எங்கள் பணத்தில் சாப்பிடுகிறீர்கள்?
உங்கள் மடத்திற்கு நாங்கள் தானம் செய்யவில்லையா? அப்படி மனம் உறுத்துகிறது என்றால், நீங்கள் ஏன் எங்கள் பணத்தில் சாப்பிடுகிறீர்கள்? அந்தப் பணத்தை தூக்கி எறியுங்கள் அல்லது அந்தப் பணத்தை எங்களிடமே திருப்பிக் கொடுங்கள். நாங்கள் சாப்பிட்டுக்கொள்கிறோம்.
எங்கள் வீடுகளில் வறுமை இருப்பதால் நாங்கள் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கிறோம். எங்களைக் குறைவாக நினைக்காதீர்கள்.நாங்கள் உங்கள் லிங்காயத் மடத்தில் வந்து உட்காருவோம். கங்காவதியிலிருந்து அனைத்து மாணவர்களும் வந்தால் உங்கள் மடம் நிற்காது.
நாங்கள் வந்தால் உங்கள் மடத்தில் ஒரு அங்குல இடமும் மிஞ்சாது. அவ்வளவு மாணவ - மாணவியர் உள்ளனர்.
பெஜாவரா மடத்தின் கருத்து:
இவ்விவகாரம் குறித்து எமது ஈடிவி பாரத் செய்தியாளர் பெஜாவரா மடத்தின் குருவிடம் கேட்டபோது, 'குழந்தைகளுக்கு என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்ற புரிதல் இருக்காது. பாரம்பரியமாக வந்த உணவு பழக்கத்தை மாற்றக்கூடாது. பள்ளியில் முட்டை கொடுப்பது சமுதாயத்திற்கு நல்லதல்ல. பள்ளி கற்பிப்பதற்கானது. அதற்காக வாழ்க்கை முறையை மாற்றக்கூடாது' என்றார்.
பள்ளிகள் ராணுவ கேண்டீனாக மாறும்
அதேபோல், முட்டை வழங்கினால் பள்ளிகள் ராணுவ கேண்டீனாக மாறும் என்றும், அதற்குப் பதிலாக தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் லிங்காயத் பீடாதிபதி சன்னபசவானந்தா சுவாமிஜி கூறியிருக்கிறார். மேலும், இந்த திட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் கடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும், மத அமைப்புகளின் முடிவை மாற்ற வேண்டாம் என்று பல ஆர்வலர்கள் கர்நாடக மாநில கல்வி அமைச்சர் நாகேஷிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க அரசுப் பேருந்தில் பயணித்த ஆட்சியர்