ஹைதராபாத்: இந்திய மக்களிடையே, காப்பீடு (Insurance) குறித்த விழிப்புணர்வு, போதிய அளவிற்கு இல்லாத காரணத்தினால், இங்கு அதுகுறித்த தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. எதிர்பாராத விபத்துகளின் போது, ஒரு தனிநபருக்குத் தேவையான நிதிப் பாதுகாப்பை வழங்க பல்வேறு வகையான பாலிஸிகள் உள்ளன.
நீங்கள் மருத்துவ காப்பீடு (health insurance) எடுக்கத் திட்டமிட்டு இருந்தால், ரொக்கமில்லா மருத்துவ காப்பீடு முறையைத் தேர்ந்தெடுப்பதே சாலச் சிறந்தது ஆகும். ரொக்கமில்லா மருத்துவ காப்பீடு முறையை எவ்வாறு பயன்படுத்துவது, அதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் உள்ள கிளைம்களை, இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது வகை, இன்சூரன்ஸ் நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்வது ஆகும். இந்த பாலிசிதாரர்கள், சிகிச்சைக்குப் பணம் எதுவும் கட்டத் தேவையில்லை. இந்த முறையைத் தான், ரொக்கமில்லா மருத்துவ காப்பீட்டு முறை என்று அழைக்கிறோம். அந்த பாலிஸி மதிப்பு வரையிலான செலவுகளை, மருத்துவமனையே ஏற்றுக்கொள்கிறது.
இரண்டாவது வகையில், நாம் முன்கூட்டியே, சிகிச்சைக்கான பணத்தை செலுத்தி, பின்னர் அதன் செலவுகளை மீட்டு எடுக்க வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேரும்பட்சத்தில், உங்கள் பாலிஸி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நெட்வொர்க் மருத்துவமனையைத் தேர்ந்து எடுக்க வேண்டும். நீங்கள் அங்கு அனுமதிக்கப்பட்டதை, உங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். மருத்துவமனைக்குச் செல்லும்போது, மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை அல்லது அதுதொடர்பான ஆவணத்தையும் மற்றும், அரசால் வழங்கப்பட்ட போட்டோ உடன் கூடிய அடையாள அட்டையை, தன்வசம் வைத்து இருப்பது கட்டாயம் ஆகும்.
பொதுவாக, ஒவ்வொரு மருத்துவமனைகளிலும், இன்சூரன்ஸ் பாலிஸி திட்டங்களுக்காக, தனியாக துறை அமைக்கப்பட்டு இயங்கி வரும். இந்த பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கிளைமிங் நடவடிக்கைகளின் போது, உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வர். சில மருத்துவமனைகளில், காப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளோ அல்லது, மூன்றாம் தரப்பு நிர்வாகிகளோ, அமர்த்தப்பட்டு இருப்பர்.
தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு, அதற்குரிய விண்ணப்பத்தில் கையெழுத்திடப்பட்ட பிறகு, மருத்துவ அறிக்கைகளுடன், அதனை காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இத்தகைய தகவல்களைச் சரிபார்த்தபிறகு, காப்பீட்டு நிறுவனம், முதற்கட்ட ஒப்புதலை வழங்கும். மருத்துவமனையில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் போது, அதற்கான ஒப்புதல்களை, காப்பீட்டு நிறுவனம், படிப்படியாக வழங்கும். உங்களுக்கான சிகிச்சை நிறைவுபெறும்போது, அதற்கான மொத்த செலவுத் தொகையை, காப்பீட்டு நிறுவனம் வழங்கி விடும்.
பணமில்லா சிகிச்சையைப் பெற, பாலிசிதாரர்கள், சில முக்கிய குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும். நெட்வொர்க் மருத்துவமனைகளில் மட்டுமே பணமில்லா தீர்வு கிடைக்கும் என்பதை எப்போதும் மறந்து விடக்கூடாது. பாலிஸி திட்டத்தில், அறை வாடகை எவ்வளவு மற்றும் பிற சிகிச்சைகள் உள்ளன என்பதைச் சரிபார்ப்பது முக்கியம் ஆகும். சில நேரங்களில், காப்பீட்டுத் திட்டத்துடன், பாலிசிதாரர்கள் சிறிது தொகையைச் செலுத்த வேண்டி இருக்கும்.
வழக்கமாக, நமது பாலிஸி திட்டத்திலேயே, தங்க உள்ள அறையின் கட்டணமும் அடங்கிவிடும். இதன் காரணமாக, பாலிஸி திட்டத்தின்படி, ஒதுக்கப்பட்ட அறையிலேயே தங்க திட்டமிடுங்கள். அறையின் வாடகை அதிகரிக்கும் பட்சத்தில், அதற்கான கூடுதல் கட்டணத்தை, நாம் செலுத்த வேண்டி இருக்கும்.
பாலிசி திட்டத்துடன், வேறு ஏதேனும் டாப் அப் சேவைகள் இணைக்கப்பட்டு இருந்தால், அதுகுறித்த முழுமையான தகவல்களை, காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்று, அதனை, சரியாக மருத்துவமனையில் தெரிவிக்கவும். தங்களது பாலிசி திட்டத்திற்கு அதிகமாக, பில் கட்டணம் இருக்கும்பட்சத்தில், இந்த டாப் அப் சேவைகள், உங்களுக்கு மிகுந்த பலன் அளிப்பவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை; காரணம் என்ன..?