சென்னை: காப்பீடு என்பது தற்போது மனிதர்களின் அத்தியாவசியங்களில் ஒன்றாக உள்ளது. அதிலும் முக்கியமாக மருத்துவக் காப்பீடு (Health Insurance) என்பது தனிநபர் அல்லது ஒரு குடும்பத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. காரணம், போதிய வருமானமின்மை, அதிகப்படியான மருத்துவச் செலவு மற்றும் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் மருத்துவச் செலவுகள் உள்ளிட்டவைகள் அடங்கும்.
இந்த நிலையில் மருத்துவக் காப்பீடுகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது. இந்த மருத்துவக் காப்பீட்டை எடுக்கும்போது, அதற்கான நெறிமுறைகளைக் கவனமாக ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பார்க்க வேண்டும். அதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், சம்பந்தப்பட்ட முகவர் அல்லது காப்பீட்டு நிறுவனத்தை அணுகி, அதனை உடனடியாக தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் பெரும்பாலும் மருத்துவக் காப்பீட்டை எடுத்த உடன், அதனை முழுமையாகப் பயன்படுத்தி விடலாம் என்ற கருத்து பொதுவாகவே உள்ளது. ஆனால், விபத்து தொடர்பானவை மட்டுமே பாலிசி எடுத்த உடன் பயன்படுத்த முடியும். மற்ற வகை மருத்துவத்துக்குக் குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும். இதற்கு ‘காத்திருப்பு காலம்’ (waiting periods) என்று பெயர்.
இந்த காத்திருப்பு காலம் என்பது ஒவ்வொரு நிறுவனத்துக்கும், ஒவ்வொரு நோய் சிகிச்சைக்கும் மாறுபடும். இதற்கு ‘கூலிங் ஆஃப் காத்திருப்பு’ (cooling off waiting) என்று பெயர். அந்த வகையில் குறைந்தது 30 நாட்கள் பாலிசிதாரர் காத்திருக்க வேண்டும். மேலும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு மற்றும் ஆஸ்துமா போன்றவை, ஏற்கனவே இருக்கும் நோய்களாகக் கருதப்பட்டு, அதற்கான தனி நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
இதற்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகையைப் பெற 2 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். அதேபோல் ஹெரினியா, கண்புரை நோய் மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை ஆகியவற்றிற்கு 2 முதல் 4 ஆண்டுகள் காத்திருக்கும் நேரம் வழங்கப்படுகிறது. சில நிறுவனங்கள் மகப்பேறு காப்பீட்டை வழங்குகின்றன.
ஆனால், இதற்கான கோரிக்கையை வைக்க பாலிசி எடுத்த பிறகு 9 மாதங்கள் முதல் 6 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். மேலும் பாலிசி ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மனநோய்களுக்கும் காப்பீடு பொருந்தும். எவ்வாறாயினும், பாலிசிதாரார் எந்தவொரு காப்பீட்டுக்கும் குறைந்தது 2 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க: சோர்வடையும் மூளை - அலட்சியம் கூடாது!