சென்னை: இந்து மக்கள் கண்ணன் பிறந்தநாளை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி என கொண்டாடி வருகின்றனர்.கிருஷ்ணரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள மட்டும் அல்ல அவரின் குணத்தையும், அவர் வாழ்ந்த வாழ்வின் அர்த்தத்தையும் மனிதக் குலத்திற்குப் பிரதிபலிக்கும் நாள். இன்று (செப்.6) கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் வாழ்வில் தூய்மையான மனதோடும், பக்தியோடும் இருக்கிறோமா என்பதை நமக்கு நாமே பரிசீலித்துக் கொள்வோம்.
கண்ணனின் குறும்பு, முகுந்தனின் விளையாட்டு புராணங்களில் கேட்கப்பட்ட கதைகளாக இருந்தாலும் நம் வீட்டுக் குழந்தைகள் ரூபத்தில் கண்ணன் எங்கும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் என்றே தோன்றுகிறது. கடவுள் மனித உலகில் பல அவதாரங்களை எடுத்து மனிதக் குலத்தைக் காத்திருக்கிறார் என்றால் அது குட்டி கண்ணனின் பிறப்பைத்தான் நினைவூட்டும்.
குழந்தைப் பருவத்தில் கோபாலன், கோவிந்தன், தாமோதரன், வேணுகோபாலன், கோவர்த்தனன் எனப் பல பெயர்களில் வாழ்ந்த கண்ணன், கொஞ்சம் வளர்ந்த உடன் மனிதக் குலத்திற்குப் போதிக்கும் வகையில் பகவத்கீதையையும், உத்தவ கீதையையும் அருளியுள்ளார். தூய்மையான மனதோடும், பக்தியோடும் வெறும் தண்ணீரைக் கொடுத்தாலும் பருகும் கண்ணன் இன்று உங்கள் வீடுகளுக்கு வருகிறார்.
வீடுகளில் அரிசி மாவால் கண்ணனின் பாதம் வரைந்து அவரை வரவேற்கக் காத்திருப்பீர்கள். மா இலை தோரணங்கள் அவரை எட்டிப்பார்த்து நிற்கும். பூக்களால் அலங்கரித்த அவரின் திருவுருவ சிலை வீட்டிற்கே வெளிச்சத்தை ஏற்படுத்தும். அவருக்குப் பிடித்த தயிர், வெண்ணெய், அவல், சீடை, முருக்கு, லட்டு என அனைத்தும் படையலிட்டு வழிபடுவீர்கள்.
இவை அனைத்தும் கண்ணனுக்குப் பிடித்தவைதான் அதை விட அவருக்குப் பிடித்த ஒன்று இருக்கிறது என்றால் உங்களின் தூய்மையான உள்ளமும், பக்தி நிறைந்த வாழ்க்கை முறையும்தான். ஒரு மனிதன் தூய்மையான உள்ளத்தோடும், பக்தியோடும் இருக்கிறார் என்றால் அவன் வாழ்கையில் ஒழுக்கமான நெறிமுறைகளை வகித்து வாழ்வான்.
அதைத்தான் கண்ணனும் எதிர்பார்க்கிறார். நீங்கள் அன்போடு அவருக்குக் கொடுக்கும் படையலைப்போன்று அனைவருக்கும் அன்போடு விருந்தோம்பல் செய்யுங்கள். அவர் அருளிய பகவத்கீதையிலும் அவர் அதைத்தான் குறிப்பிட்டிருப்பார்.
"நீ எனக்கு இலை கொடுத்தாலும் சரி, பூ கொடுத்தாலும் சரி இல்லை ஒரு பழம் கொடுத்தாலும் சரி எதுவும் இல்லை என்றால் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தால்கூட போதும்.. ஆனால் எதைக்கொடுத்தாலும் பக்தியோடும், சுத்தமான உள்ளத்தோடும் கொடு நான் சாப்பிடுவேன்" என்று கூறியிருப்பார்.
நீங்கள் செய்யும் ஈகையில் இறைவனைக் காணலாம்.. நீங்கள் கொடுக்கும் உணவைக் கண்ணன் கிருஷ்ணனே வந்து உண்ணலாம். கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுங்கள்... அவர் குணத்தைப் பிரதிபலியுங்கள்..
இதையும் படிங்க: கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்.. கண்ணன் மற்றும் ராதையாக உலா வந்த மழலையர்கள்!