டெல்லி: நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படுவதாக நேற்று (மே 20) அறிவித்த ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 30ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என அறிவித்தது. மேலும் வங்கிகள் இனி பொதுமக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி பினோய் விஸ்வம் கூறுகையில், "மத்திய அரசு ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இது பிரதமர் மோடி அரசின் பொருளாதார வலிமையை காட்டுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். பணமதிப்பிழப்புக்கு பிறகு இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மத்திய அரசுக்கு தைரியம் இருக்கிறதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, ”கருப்பு பணம், ஊழல், தீவிரவாதிகளுக்கு பண விநியோகத்தை தடுத்தல் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவே 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் அந்த நடவடிக்கை தலைகீழாக சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக தோல்வியை சந்தித்து இருக்கிறது. பணமதிப்பிழப்பால் வங்கி வாசலில் காத்திருந்து நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முடங்கின.
பணமதிப்பிழப்பு என்ற பேரிடர் ஏற்பட்டதில் இருந்து புழக்கத்தில் உள்ள பண விகிதம் 83 சதவீதம் அதிகரித்துள்ளது. ஊழலும் பன்மடங்கு வளர்ந்துள்ளது. சமீபத்தில் நடந்த தேர்தலில் 40 சதவீதம் கமிஷன் வாங்கும் அரசை, கர்நாடகா மாநிலம் புறக்கணித்தது. அப்பாவி மக்களின் உயிர்களை பறிக்கும் தீவிரவாத தாக்குதல் தொடர்கிறது. நமது பொருளாதாரத்தை பிரதமர் மோடி அழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுடன் கைகோர்ப்பதை நிராகரிக்க வேண்டும். மதசார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்" என கூறியுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், "2016 நவம்பர் 8ம் தேதி மக்களை தாக்கிய பணமதிப்பிழப்பு என்ற பேய், மீண்டும் வந்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்களின் பயன்களை பிரதமர் எடுத்துரைத்த நிலையில், அந்த நோட்டுக்களின் அச்சடிப்பு நிறுத்தப்பட்டது ஏன்? பிரதமரின் வாக்குறுதிகள் என்ன ஆனது? இந்த நடவடிக்கையை எடுத்ததற்கான காரணம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். மக்கள் விரோத கொள்கையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது" என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.2000 விவகாரத்தில் ரிசர்வ் வங்கி சொல்வது என்ன? - மிஸ் பண்ணிறாதீங்க மக்களே!