டெல்லி : கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சூதாட்ட புகார் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
சூதாட்ட விவகாரத்தில் தோனிக்கு தொடர்பு இருப்பதாக தனியார் தொலைகாட்சியில் நடந்த விவாதத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மற்றும் தனியார் தொலைகாட்சி நிறுவனம் அவதூறு பரப்புவதாகவும், 100 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் கடந்த 2014ஆம் ஆண்டு தோனி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி எம்.எஸ். தோனிக்கு எதிராக எந்த கருத்தையும் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார் வெளியிடக் கூடாது என உத்தரவிட்டது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி சூதாட்ட மோசடி வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார்.
நீதிமன்ற உத்தரவை மீறி, உலக அளவில் உள்ள தனது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் பிரியர்களுக்கு மத்தியில் தனது பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையிலும், நீதித்துறை மற்றும் தனக்கு எதிரான வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞருக்கு எதிராகவும் அவதூறு கருத்துகளை பிரமாணப் பத்திரமாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக தோனி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டது. தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தோனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர்மோகன் அமர்வு, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
அப்போது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக கூறி உத்தரவிட்டனர்.
தோனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மட்டுமே நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மற்றும் தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : எம்.எஸ்.தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை!