ஹைதராபாத்: பெங்களூரில் இருக்கும் பருவ நிலைச் செயற்பாட்டாளரான 21 வயது திஷா ரவி என்பவர் ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு இதுதான்; விவசாயிகளின் போராட்டம் சம்பந்தமாக சமூக வலைதளங்களில் ‘டூல்கிட்’டைப் பகிர்ந்து கொண்டதில் அவருக்குப் பெரும்பங்கு இருப்பதாகச் சொல்லப்பட்டது. திஷா என்னும் அந்தப் பெண் ஐந்து நாட்கள் போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்.
திஷா ரவி ‘டூல்கிட் கூகுள் டாக்’ என்பதின் எடிட்டராக இருக்கிறார் என்று சொல்லும் காவல்துறை, டாக்குமெண்டின் (ஆவணம்) உருவாக்கத்திலும் அதைப் பரப்புவதிலும் அவர் ஒரு முக்கியமான சதிகாரர் என்று குற்றம் சாட்டியிருக்கிறது. அந்த டூல்கிட்டை அவர் பரப்பியதன் விளைவாக பின்பு ஸ்வீடன் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் அதைப் பயன்படுத்திக் கொண்டார் என்றும், காவல்துறை மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.
ஸ்வீடன் பருவநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் ‘டூல்கிட்’ என்றழைக்கப்படும் கூகுள் ஆவணத்தை பிப்ரவரி 5ஆம் தேதி அன்று ட்விட்டரில் பகிர்ந்துவிட்டு பின்பு அதை நீக்கினார். பின்னர் அவர் அந்த ஆவணத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தைத் தனது சமூக வலைதளங்களில் பகிர, அது மேலும் பரவலாகப் பகிரப்பட்டது.
காலிஸ்தானுக்குச் சார்பாக, இந்திய அரசுக்கு எதிராக ஒரு சமூக, கலாச்சார, பொருளாதார யுத்தத்தைத் தொடங்கும் நோக்குடன் இந்த ‘டூல்கிட்டை’ உருவாக்கியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையைக் காவல்துறை பதிவு செய்தது. சதி, ராஜத்துரோகம் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், மற்றும் இந்தியன் தண்டனை சட்டம் (ஐபிசி) பிற பகுதிகளின் கீழும் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட, ஆனால் தப்பி ஓடிவிட்ட வழக்கறிஞர் நிகிட்டா ஜேக்கப், பொறியாளர் ஷாந்தனு முலுக் ஆகியோர் மீது பிணையில் வரமுடியாத வாரண்ட்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சர்ச்சையின் மையத்தில் இருக்கும் டூல்கிட் என்றால் என்ன?
’டூல்கிட்’ என்றால் வழமையான ஓர் ஆவணம் அல்லது ஒரு குட்டிப்புத்தகம்தான். ஒரு லட்சியத்தை அல்லது பிரச்சினையை விளக்குவதற்காக உருவாக்கப்படுவது. சில பிரச்சினைகள் சம்பந்தமாகப் பரப்புரையைத் தொடர்ந்து செய்வதற்கு உதவும் விலை மதிப்பில்லாத ஓர் ஆதாரம் அது. பரப்புரைக்கான செயல் திட்டமும் அதில் உள்ளடங்கும்.
குறிப்பாக ஒரு பிரச்னை பெரிதாக வெடிக்கும்போது அல்லது உருவாகிக் கொண்டிருக்கும்போது, முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரச்னைக்கான வழிகாட்டுதலையும், அறிவுரையையும் வழங்கக் கூடியவை அந்த ‘டூல்கிட்’டுகள்தான். ஒரு பிரச்னையை நன்றாகப் புரிந்து கொள்வதற்கும், அதை ஆய்வு செய்வதற்கும் தேவையான தகவலை ஒரு ‘டூல்கிட்’ தரமுடியும்.
அடிப்படைப் பிரச்னைகளை பற்றிய தகவல்களை, கொடுக்கப்பட்ட மனுக்கள், நடத்திய போராட்டங்கள், மக்கள் இயக்கங்கள் ஆகிய தரவுகளை அந்த ஆவணம் கொடுக்கும். கிரேட்டா தன்பெர்க் பகிர்ந்துகொண்ட ‘டூல்கிட்’ சொல்வது இதுதான்: “இப்போது நடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் எதிர்ப்புகளைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் இந்தச் சூழ்நிலையைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்வதற்கும், தங்களின் ஆய்வுச் சிந்தனையின் அடிப்படையில் எப்படி விவசாயிகளை ஆதரிப்பது என்று முடிவுகள் எடுப்பதற்கும் உதவுவதற்காக இந்த ஆவணம் உருவாக்கப்பட்டிருக்கிறது.”
விவசாயிகளின் போராட்டங்களை ஆதரிக்கும் வண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை அந்த ஆவணம் பட்டியல் போட்டிருக்கிறது. ட்விட்டரில் ஒரு செய்தியை வைரலாக்குவது, வெளிநாட்டில் இருக்கும் இந்திய தூதரகங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்துவது ஆகியவை அந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
காவல்துறை ஏன் ‘டூல்கிட்டை’ வேவு பார்க்கிறது?
டெல்லி காவல்துறை சொல்வது இதுதான்:
கிரேட்டா தன்பெர்க் பகிர்ந்துகொண்ட, திஷா ரவி எடிட் செய்த ‘டூல்கிட்’ பின்வரும் செயற்பாடுகளைப் பற்றிப் பேசுகிறது: ”ஜனவரி 26இல் அல்லது அதற்கு முன்பாக ஹாஷ்டாக்ஸ் மூலம் பெரிய மின்னணுத் தாக்குதல் செய்தல், ஜனவரி 23இல் டிவிட்டர் புயல்களை உருவாக்குதல், ஜனவரி 26இல் பெளதீக தாக்குதல் செய்தல், விவசாயிகளுக்காகக் கண்காணிப்புப் பணியைச் செய்தல் அல்லது அவர்களோடு இணைந்து டெல்லிக்கு நடை ஊர்வலம் சென்றுவிட்டு எல்லைகளுக்குத் திரும்புதல்.”
விவசாயிகளின் தீவிரமான போராட்டத்தை ஆதரிக்கும் ‘டூல்கிட்’ இந்தியாவின் நற்பெயர்க்குக் களங்கம் விளைவிக்கும் நோக்குடன் பகிரப்பட்டது என்றும், காலிஸ்தானிகளுக்கு ஆதரவாக அவர்களோடுக் கூட்டுச் சேர்ந்திருக்கிறது என்றும், டெல்லிக் காவல்துறை அலுவலர்கள் கூறியிருக்கின்றனர். விவசாயிகளின் போராட்டம் சம்பந்தமாக ட்விட்டரில் தன்பெர்க்கும் மற்றவர்களும் பகிர்ந்துகொண்ட ‘டூல்கிட்’டை உருவாக்கியவர்களின் சமூக வலைதளக் கணக்குகளையும், மின்னஞ்சல் அடையாளங்களையும், யூஆர்எல்களையும் தரும்படி டெல்லிக் காவல்துறை கூகுளையும், மற்ற சமூக வலைதள நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இது நடந்தது ஜனவரி 26க்குப் பின்னால். டெல்லியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட காவல் பாதுகாப்பு ஊழியர்கள் காயமடைந்தனர். அந்தக் குடியரசு நாள் வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் யுத்தம்
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் டெல்லி எல்லைகளில் நடத்தும் போராட்டம் மூன்றாவது மாதத்தில் நுழைந்திருக்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசத்தில் சில பகுதிகள் ஆகியவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் மத்திய அரசு அறிமுகம் செய்த மூன்று புதிய வேளாண் சட்டங்கள் பெரிய நிறுவனங்களை ஆதரிப்பவை என்றும், அவை சந்தை அமைப்பைப் பலகீனப்படுத்திவிடும் என்றும் கூறி, அவற்றை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துப் போராடுகிறார்கள். இதுவரை மத்திய அரசிற்கும், 41 விவசாயி சங்கங்களுக்கும் இடையே 11 தடவை பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன.
ஆனால் அவை எந்த முடிவையும் எட்டவில்லை. மத்திய அரசு புதிய சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்திவைப்பதாகச் சொல்லியிருக்கிறது. ஆனால் விவசாயிகள் அந்தச் சலுகையை ஏற்கவில்லை.
இதையும் படிங்க: 'திஷா ரவியை தேசத்துரோக வழக்கில் கைதுசெய்வதா?' - வைகோ கண்டனம்