சூரத்: குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள மோர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, கடற்கரையில் திமிங்கல குட்டி ஒன்று கிடந்ததைக் கண்டுள்ளனர். சுமார் இரண்டு டன் எடையும், இரண்டு அடி நீளமும் கொண்ட திமிங்கல குட்டியைக் காணக் கிராம மக்கள் ஏராளமானோர் அங்குக் குவிந்தனர். கரையில் திமிங்கலம் மூச்சு விட முடியாமல் தவிப்பதைக் கண்ட கிராம மக்கள், திமிங்கிலத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக திமிங்கலம் மூச்சுவிடுவதற்குத் தேவையான தண்ணீரைக் கொண்டுவர முடிவு செய்தனர். அதற்காகக் கரையில் இரு பெரிய குழியைத் தோண்டினர். பின்னர், குழிக்குள் இருந்த தண்ணீருக்குள் திமிங்கலத்தை போட்டனர். மேலும், அதன் மேல் இளைஞர்கள் தண்ணீரை ஊற்றி திமிங்கிலத்தைக் காப்பாற்றும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அங்கிருந்தவர்கள் இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். மேலும், உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரயாசுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் திமிங்கிலத்தைக் கடலில் சேர்க்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். இது குறித்து, வனத்துறை அதிகாரி தீபக் படேல் கூறுகையில், “மாலையில் கடற்கரைக்கு வந்த ஊழியர்கள் திமிங்கல குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.
பின்னர் சூரத் மாவட்ட வனத் துறையின் துணைக் காப்பாளர் சச்சின் குப்தா கூறுகையில், “திமிங்கல குட்டி கரை ஒதுங்கிய கிராம மக்களுக்கு எங்களுக்கு இரவு 7 மணியளவில் தகவல் அளித்தனர். அதனையடுத்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த திமிங்கல குட்டியை விரைவில் கடலுக்குத் திருப்பி அனுப்புவதே எங்கள் முயற்சி. இந்த மீனின் எடை சுமார் 2 டன்கள் இருக்கும்” என்றார்.
தொடர்ந்து பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே வனத்துறையினர், திமிங்கல குட்டியை மீட்டு கடலுக்குள் கொண்டு சேர்ந்தனர்.
இதையும் படிங்க: நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானை..வைரல் வீடியோ!