கோண்டா: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷண் சரண். பாஜக எம்பியான இவர் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். மேலும் மல்யுத்த சம்மேளனத்தின் பயிற்சியாளர்கள் சிலர் மீதும் பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சரண் பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சரண் மீது டெல்லி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் குற்றமற்றவன். எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளேன். உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதிக்கிறேன். அதேநேரம் எனக்கு சட்டத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது.
பதவியை ராஜினாமா செய்வது என்பது பெரிய விஷயமில்லை. ஆனால் நான் ஒன்றும் குற்றவாளி அல்ல. ஒருவேளை நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டால், என் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டது போல் ஆகிவிடும். எனது பதவிக்காலம் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இன்னும் 45 நாட்களில், மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
மல்யுத்த வீரர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோரிக்கையை முன்வைக்கின்றனர். என் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றார்கள். போலீசார் வழக்குப்பதிவு செய்துவிட்டனர். நான் எனது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்றனர். நான் ஒரு எம்பி. ஹரியானாவில் இருக்கும் 90 சதவீத வீரர்கள் என் பக்கம் இருக்கிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க: அமெரிக்கா எச்-1பி விசா குலுக்கல் முறையில் முறைகேடு - இந்தியர்களுக்கு சிக்கலா?