ஹைதராபாத்: தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாம மாறி, பின்னர் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘பிப்பர்ஜாய்’ என பெயரிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், வருகிற 14ஆம் தேதி வடகிழக்கு பகுதியை நோக்கி நகரும் என தெரிவித்துள்ளது.
இவ்வாறு நகரும் இந்த புயலானது, குஜராத் மாநிலத்தின் செளராஷ்டிரா, கட்ச் மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை மாண்ட்வி கராச்சி இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், வருகிற 15ஆம் தேதி குஜராத்தின் ஜவாக் துறைமுகம் இடையே பிப்பர்ஜாய் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், போர்பந்தரின் தென்மேற்கு திசையில் இருந்து 290 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு மத்திய அரேபியக் கடல் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் புயல் மையம் கொண்டுள்ளது. அதேநேரம், ஜகவ் துறைமுகத்தின் தெற்கு - தென்மேற்கு பகுதியின் 360 கிலோ மீட்டர் தொலைவில் நள்ளிரவு 2.30 மணியளவில் புயல் மையம் கொண்டுள்ளது.
மேலும், நேற்று (ஜூன் 12) இரவு 11.30 மணியளவில் போர்பந்தரின் தென்மேற்கில் 310 கிலோ மீட்டர், தேவ்பூமி துவாரகாவின் தென்மேற்கு திசையில் 320 கிலோ மீட்டர் மற்றும் ஜகவ் துறைமுகத்தின் தெற்கு - தென்மேற்கு திசையில் 380 கிலோ மீட்டரில் மிகக் கடுமையான புயலாக இருந்தது, கடுமையான புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது மட்டுமல்லாமல், அந்த பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காந்திதாம், வேரவல், ஒகா மற்றும் போர்பந்தர் நோக்கிச் செல்லும் 56க்கும் மேற்பட்ட ரயில்கள், அகமதாபாத், ராஜ்கோட் மற்றும் சுரேந்திர நகர் ஆகிய இடங்களில் பகுதி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், இன்று (ஜூன் 13) முதல் வருகிற 15ஆம் தேதி வரை 100க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற 16ஆம் தேதி பிப்பர்ஜாய் புயலின் காரணமாக பாதுகாப்பு கருதி தென்மேற்கு ராஜஸ்தானில் ரயில் சேவை முழுவதுமாக ரத்து அல்லது பகுதி நேர ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடமேற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதில், புயலின் தாக்கம் காரணமாக வருகிற 15ஆம் தேதி பிற்பகல் நேரத்தில் ஜோத்பூர் மற்றும் உதய்பூர் மண்டலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 5 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 9 ரயில்களின் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வடமேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: Cyclone Biparjoy: குஜராத்தை நெருங்கும் பிப்பர்ஜாய் புயல்.. அலர்ட் நிலையில் அரசு!