கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று விவசாயக் கழிவு எரிப்பு எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா சூழலில் தீபாவளி, குளிர்காலம் வரவுள்ள வேளையில், விவசாய கழிவுகளை எரிப்பது காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் என மருத்துவர்கள் சொன்னதை ஏற்று, சுற்றுச்சூழல் துறை இம்முடிவை எடுத்துள்ளது. வேளாண் துறையினர் விவசாயக் கழிவுகளை எரிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து மேற்கு வங்க சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சோமன் மஹாபத்ரா, நெல் அறுவடைக்குப் பிறகு மிஞ்சிய கழிவுகளை எரிப்பதை விவசாயிகள் வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த முறை விவசாயிகளை சந்தித்து இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எடுத்துரைத்தோம். இன்று (நவம்பர் 4) விவசாயக் கழிவு எரிப்பு எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும், தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு எதிராக பள்ளிக்கூட மாணவர்களிடம் பரப்புரை மேற்கொள்ளவுள்ளோம். மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் கடமையாகும் என்றார்.