கொல்கத்தா (மேற்கு வங்கம்): வன்முறையால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 11) காலை 8 மணிக்கு தொடங்கியது. கடந்த ஜூலை 8 அன்று நடைபெற்ற தேர்தலின்போது மாநிலம் முழுவதும் ஏற்பட்ட வன்முறையில் 20 பேர் உயிரிழந்து உள்ளனர்.
வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்டது, தேர்தல் முறைகேடுகள், வாக்காளர் மிரட்டல் போன்ற பல புகார்கள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, அன்று நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 696 வாக்குச்சாவடிகளில் நேற்று (ஜூலை 10) மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைகேடு சர்ச்சைகளால் மம்தா பானர்ஜி அரசிற்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை சோதிக்கும் தேர்தலாக இது அமைந்து உள்ளது. மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத்தில் முக்கிய எதிர்கட்சியான பாஜகவின் நிலை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும் இந்த தேர்தல் முடிவுகள் உதவும் என நம்பப்படுகிறது.
முதலில், கிராம பஞ்சாயத்துகளுக்கான வாக்குகளும், அதைத் தொடர்ந்து ஜில்லா சமிதிகள் மற்றும் ஜில்லா பரிஷத் வாக்குகளும் எண்ணப்பட உள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பிற்காக மத்திய பாதுகாப்பு படையினரும் போதுமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்ற மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார். அந்த சந்திப்பிற்கு பிறகு, சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருப்பதை போல, எதிர்காலத்தில் நல்லது நடக்கும் என ஆளுநர் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா நான்கு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை மாநிலத்தின் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு அறிக்கை அனுப்ப பரிந்துரைத்தார். இந்த குழுவில் முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் எம்பியுமான ரவிசங்கர் பிரசாத், முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங், ராஜ்தீப் ராய், ரேகா வர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், ஆயிரக்கணக்கான சாவடிகளில் மறுவாக்கெடுப்பு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியது. இது குறித்து பேசிய மேற்கு வங்க சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, ‘சனிக்கிழமை (ஜூலை 8) வாக்குப்பதிவின்போது ஆயிரக்கணக்கான சாவடிகளில் நடந்த முறைகேடு சம்பந்தமாக சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்குச் சென்று சமர்பிப்பேன்’ என்றார்.
மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஜில்லா பரிஷத்தில் உள்ள 928 இடங்களிலும், பஞ்சாயத்து சமிதிகளில் 9,419 இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 61,591 இடங்களிலும் போட்டியிடுகிறது. பாஜக 897 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 7,032 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 38,475 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.