மேற்குவங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை முதலமைச்சராக புத்ததேப் பட்டாச்சார்ஜி பதவி வகித்தார்.
76 வயதான இவர் வயது மூப்பு காரணமாக நுரையீரல் அடைப்பு போன்ற பிரச்னைகளை சந்தித்துவருகிறார். இந்த பிரச்னை காரணமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் கடுமையான மூச்சுத் திணறல் காரணமாகக் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்டஸ் மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று(டிசம்பர்-13) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ நிர்வாகம்," ஐந்து பேர் கொண்ட மருத்துவர் குழு முன்னாள் முதலமைச்சரைக் கண்காணித்துவருகின்றனர். அவர் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். நேற்றுவரை அவரது உடல் நிலை மோசமாக இருந்த வந்த நிலையில் தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்று காலை அவருக்கு ஆக்ஸிஜன் சோதனை நடைபெற்றது. தற்போது அவரால் பேசமுடிகிறது. அவரின் சிறுநீரக செயல்பாடு மேம்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறார்" எனத் தெரிவித்துள்ளது.