கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், பகதூர் பிஸ்வகர்மா என்ற போலீஸ் அதிகாரி ஓராண்டுக்கு முன்பு டயாலிசிஸ் சிகிச்சை செய்துள்ளார்.
இவர், கடந்த ஆண்டு ஜூன் 23ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில், அந்த அரசு மருத்துவமனையில், இறந்து போன பகதூருக்கு இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டதாக கூறி, ரசீதுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஒருமுறை மட்டுமல்ல, சுமார் ஓராண்டாக பகதூரின் பெயரில் போலியான ரசீதுகளை சமர்ப்பித்துள்ள பணம் பெற்றுள்ளனர். இந்த சம்பவத்தை ஈடிவி பாரத் அம்பலப்படுத்தியது. சம்பவம் குறித்து அறிந்த அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்தன் கோஷ் நோயாளி போல மாறுவேடமிட்டு டயாலிசிஸ் பிரிவில் கண்காணித்துள்ளார்.
அதில், போலியான ரசீதுகள் உள்பட பல ஆவணங்கள் சிக்கியுள்ளன. நோயாளிகளுக்கு இலவசமாக டயாலிசிஸ் செய்யப்பட்டதாக போலியான ரசீதுகளை தயாரித்து, அதை மாநில அரசிடம் சமர்பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக மருத்துவமனையின் டயாலிசிஸ் பிரிவு பொறுப்பாளர் சவுரப் தலூதியிடம் கேட்டபோது, தான் விடுப்பில் இருப்பதாகவும், தான் பணியில் இல்லாதபோது தன்னைப் போல கையெழுத்திட்டுள்ள மோசடி செய்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை அம்பலப்படுத்திய ஈடிவி பாரத்திற்கு, மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்தன் கோஷ் பாராட்டு தெரிவித்தார்.