மேற்கு வங்கம் மாநிலம் பட்பாரா ரயில் தண்டவாளம் அருகே நேற்று(அக்.25) கிடந்த குண்டு வெடித்தில் நிகில் பஸ்வான் எனும் சிறுவன் உயிரிழந்தான். பிரேம்சந்த் நகர் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் சுசிலா வெர்மா கூறுகையில், “நான் வீட்டில் அன்றாட வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது திடீரென குண்டு வெடித்த சப்தம் கேட்டது. அதிர்ந்து போய் வெளியே வந்து பார்த்தேன். அப்போது கையில் அடிபட்ட ஓர் சிறுவன் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கையில், மற்றொரு சிறுவன் அங்கே படுத்தபடி கிடந்தான். நான் அவன் அருகே சென்று எழுப்ப முயன்ற போது அவன் எழவில்லை” என்றார்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், “ரயில் தண்டவாளத்தின் அருகே டின் ஒன்று கிடந்துள்ளது. அதனைக் கண்ட சிறுவன் நிகில் அதை எட்டி உதைத்து விளையாடியுள்ளான். அப்போது, திடீரென அந்த டின் வெடித்துள்ளது. இந்த வெடிப்பால், நிகில் பஸ்வான், அவருடன் இருந்த மற்றொரு சிறுவன் மனோஜ் ஷாவ், அருகிலிருந்த ஒரு பெண் படுகாயமடைந்தனர்.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிறுவன் நிகில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெடிகுண்டு நிபுணர் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அது எந்தவகையான குண்டு. எப்படி அங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குஜராத்தில் இரு மதத்தவரிடையே மோதல்; ஐபிஎஸ் அதிகாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு..