மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதியும், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1ஆம் தேதியும், மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதியும் நடைபெற்றது.
இந்த நிலையில் நான்காம்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 44 தொகுதிகளில் இன்று நடைபெற்றுவருகிறது. மேற்கு வங்கத்தில் அரியணையைக் கைப்பற்ற திருணமூல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவிவருகிறது.
நான்காம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 15 ஆயிரத்து 940 வாக்குச்சாவடிகளும் பதற்றம் உள்ளவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு மத்திய பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
நான்காம்கட்ட தேர்தலில் மொத்தம் 373 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பெண் வேட்பாளர்கள் 50 பேர். ஒரு கோடியே 15 லட்சத்து 81 ஆயிரத்து 22 வாக்காளர்கள் உள்ளனர்.