கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் புரூலியா, ஜார்கம், பங்குரா, புர்பா மேதினாப்பூர் மற்றும் பாசிம் மேதினாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதியில் சனிக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவானது மாலை 6 வரை நடைபெறுகிறது.
இந்தத் தொகுதிகளில் 21 பெண்கள் உள்பட 191 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ்- இடதுசாரிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் திரிணாமுல் காங்கிரஸும், கைப்பற்றும் முயற்சியில் பாஜகவும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
இரு கட்சிகளிலும் மிகப்பெரிய அளவில் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தியுள்ளன. மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். இறுதிக்கட்ட தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் மதியத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
காலை 9 மணி வரையிலான முதல்கட்ட வாக்குப்பதிவின்படி அஸ்ஸாமில் 8.84 விழுக்காடும், மேற்கு வங்கத்தில் 7.72 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.