திஸ்பூர்: அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (மார்ச் 27) காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்குவங்கத்தில், முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமின் 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. தற்போது மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
அஸ்ஸாமில் மொத்தம் 81.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில், 40 லட்சத்து 77 ஆயிரத்து 210 ஆண்கள் மற்றும் 40 லட்சத்து 32 ஆயிரத்து 481 பெண்கள் ஆவார்கள். இதற்காக, 11 ஆயிரத்து 537 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 264 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தத் தேர்தலில் 37 எம்எல்ஏக்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், 24 பேர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் காங்கிரஸ் (6), அஸ்ஸாம் கன பரிஷத் (6) மற்றும் ஒருவர் ஏஐயூடிஎஃப் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். முதல்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 375 கம்பெனி துணை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நட்சத்திர வேட்பாளர்கள்
இந்தத் தேர்தலில் ஹிதேந்திர நாத் கோஸ்வாமி ஜோர்கட் தொகுதியிலும், அமைச்சர்கள் ரஞ்சித் தத்தா பெகலியிலும் நாம குமார் தோலே ஜோனை பகுதியிலும் சஞ்சோய் கிஷன் தின்சுகியா தொகுதியிலும் களம் காண்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ரிபுன் போரா கோக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜகவின் தற்போதைய எம்எல்ஏ உத்பல் போரா போட்டியிடுகிறார்.
இந்தத் தொகுதியில் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ரிபுன் போராவின் மனைவி மோனிகா போரா போட்டியிட்டு தோல்வியை தழுவினார். குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அஸ்ஸாம் சட்டப்பேரவை தேர்தல் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது.