டெல்லி : உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக தீரத் சிங் ராவத் உள்ளார். இவர் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்காமல் நேரடியாக முதலமைச்சராக பொறுப்பேற்றவர் ஆவார்.
இதனால் முதலமைச்சர் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்தன. இதைத்தொடர்ந்து தீரத் சிங் ராவத், பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டாவுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராவத், “மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினோம். மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்துக்கு கொண்டுவருவது குறித்தும் விவாதித்தோம்” என்றார்.
இரவோடு இரவாக ராஜினாமா
தொடர்ந்து, “இடைத்தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்” என்பதையும் கூறினார். தீரத் சிங் ராவத் பவுரி கார்க்வால் மக்களவை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் மார்ச் (2021) மாதம் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், பதவியேற்று 4 மாதங்களே ஆன நிலையில், நேற்று இரவோடு இரவாக தனது பதவியை தீரத் சிங் ராவத் ராஜினாமா செய்துள்ளார். இது உத்தரகாண்ட் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்எல்ஏக்கள் கூட்டம்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 164(4)இன் படி ஒருவர் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்காமல் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் அடுத்த 6 மாதத்துக்குள் பேரவை தேர்தலை சந்திக்க வேண்டும். அதனடிப்படையில் ராவத், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (ஜூலை 3) டேராடூனில் நடைபெறுகிறது. அப்போது புதிய முதலமைச்சர் தேர்வு குறித்து பேசப்படும் எனக் கூறப்படுகிறது.
இரு தொகுதிகள் காலி
உத்தரகாண்டில் ஹங்கோத்ரி மற்றும் ஹால்டுவானி ஆகிய இரண்டு சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. அண்மையில் ஹங்கோத்ரி பாஜக எம்எல்ஏ கோபால் ராவத் மற்றும் ஹால்டுவானி காங்கிரஸ் எம்எல்ஏ இந்திரா ஹிருதயேஷ் காலமானார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : பாஜகவுடன் மோத தயாராகும் ஆம் ஆத்மி!