புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பழகன் நேற்று (பிப்.23) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "புதுச்சேரி மாநில முதலமைச்சராக இருந்த நாராயணசாமியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் படுதோல்வி அடைந்தது.
இதனையடுத்து, உண்மைக்குப் புறம்பான சில கருத்துகளை நாராயணசாமி தெரிவித்து வருகிறார். அனுதாபம் பெறுவதற்காக வழக்கமான பொய்யை கூறி வருகிறார்.
சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடக்கும்போதே, அதில் கலந்துகொள்ளாமல் சபையை விட்டு வெளியேறிய காங்கிரஸ்-திமுக உறுப்பினர்களின் உண்மை நிலையை மக்கள் உணர்ந்துள்ளனர்.
காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. எதிர்க்கட்சிகளை குறை சொல்ல நாராயணசாமிக்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் எந்த தகுதியும் இல்லை.
அதிமுகவுக்கு குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க துளியும் விருப்பமில்லை. அப்படி இருந்திருந்தால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி இருப்போம். அதிமுக தலைமை அதற்கெல்லாம் உடன்படாது. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால் செல்லமாட்டோம்" என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு பாஜக காரணம் இல்லை: எல்.முருகன்