டெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று (பிப். 7) பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தின. கேள்வி நேரத்தின்போது விவாதிக்கலாம் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இருப்பினும், எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், அவை நடவடிக்கைகள் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இதையடுத்து விவாதம் மீண்டும் தொடங்கியது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்ராவின் போது மக்களின் குரல்களைக் கேட்டோம். குழந்தைகள், பெண்கள், முதியவர்களிடம் பேசினோம். இளைஞர்கள் வேலையின்மையால் தவிப்பதை கேட்டோம். அவர்கள் உபெர் போன்ற நிறுவனங்களுக்கு ஓட்டுநர்களாக மாறிவருவதை காண்கிறோம்.
தமிழ்நாடு, முதல் இமாச்சலப் பிரதேசம் வரை அதானி என்ற ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதானி எப்படி எந்த தொழிலும் தோல்வியை சந்திப்பதில்லை என்று மக்கள் என்னிடம் கேட்கின்றனர். நாடு முழுவதும் 10 துறைகளில் அதானி தொழில் நடத்திவருகிறார். 2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை அவரது நிகர லாபம் 8 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலரை எட்டியது எப்படி என்று இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
காஷ்மீர் ஆப்பிள்கள் முதல் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் வரை அதானியின் தொழில் நடந்துவருகிறது. ஆனால், முக்கியமான ட்ரோன் தயாரிப்பில் ஈடுபடுவதில்லை. மற்ற நிறுவனங்கள் மட்டுமே ட்ரோன்களை தயாரிக்கின்றன. பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றுவந்தால், அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல வங்க தேசத்துக்கு சென்றுவந்தால், அந்நாட்டுன் 25 வருட ஒப்பந்தங்களில் அதானி குழுமம் கையெழுத்திடுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகள் முதலில் குஜராத்தில் மட்டுமே நடந்தது. அதன்பின் இந்தியா முழுவதும் நடந்தது. இப்போது சர்வதேச அளவில் நடந்துகொண்டிருக்கிறது. விவசாயிகள் PM-BIMA யோஜனாவின் கீழ் பணம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுகின்றனர். பழங்குடியினர் மசோதா பற்றி மலைவாழ் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அக்னிவீர் திட்டம் மூலம் 4 ஆண்டுகளுக்கு வெளியேற்றப்படுவதை பற்றி இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த திட்டம் ஆர்எஸ்எஸிடம் இருந்து வந்தது என்று ஓய்வு பெற்ற மூத்த ராணுவ வீரர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு இந்த திட்டம் ராணுவத்தின் மீது திணிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த திட்டம் மூலம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்படும் நிலையில் அவர்கள் மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்படும்போது வன்முறைக்கு வழிவகுக்கும் என்ற கருத்தை கேட்க முடிகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் உரையின்போது, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையில் வேலையின்மை, பணவீக்கம் போன்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "எனது குடும்பமும், காங்கிரசாரும் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்" - உம்மன் சாண்டி விளக்கம்