சிலிகுரி (மேற்கு வங்கம்): டிசம்பர் 7ஆம் தேதி சிலிகுரி பகுதியில் நடைபெற்ற பேரணியின்போது வன்முறையை ஊக்குவித்ததாக பாஜக மூத்தத் தலைவர்கள் கைலாஷ் விஜய்வர்கியா, தேஜஸ்வி சூர்யா, திலீப் கோஷ் உள்ளிட்டோர் மீது மேற்கு வங்க காவல் துறையினர் புதன்கிழமை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவுசெய்தனர்.
மேற்கு வங்கத்தில் பாஜக நடத்திய பேரணியின்போது, வன்முறையை உருவாக்கவும், சட்டம் ஒழுங்கை மீறவும், காவலர்களுடன் மோதவும், அரசு சொத்துகளைச் சேதப்படுத்தவும் ஊக்குவித்ததாகப் புகார் எழுந்தது.
இந்தப் புகாரின்பேரில் காவலர்கள் பாஜக தேசிய செயலாளரும் மாநில கண்காணிப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா, எம்.பி.யும், பாஜக தேசிய இளைஞரணித் தலைவருமான தேஜஸ்வி சூர்யா, மாநிலத் தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்டோர் மீது காவலர்கள் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவுசெய்தனர்.
இந்த வழக்கு ஜல்பைகுரி காவல் நிலையத்தில் பதியப்பட்டது. இந்நிலையில், சௌமித்ரா கான், சயந்தன் போஸ், சுகந்தா மஜும்தர், நிசித் பிரமானிக், ராஜு பிஸ்டா, ஜான் பிர்லா, கோகன் முர்மு, சங்கு தேப் பாண்டா, பிரவீன் அகர்வால் உள்ளிட்டோர் மீது காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து காவலர்கள் தரப்பில் வெளியான அறிக்கையில், சிலிகுரி பாஜக பேரணியின்போது கடுமையான வன்முறைக்குத் திட்டமிட்டதாகவும், வன்முறைச் செயல்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கூட்டத்தினர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதாகவும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாஜக தேசிய செயலாளரான கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், “இந்தப் பேரணியில் பாஜக தொண்டர் கொல்லப்பட்டதில் காவலர்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களின் தொடர்பு உள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், “மம்தாவின் கொடுங்கோல் ஆட்சியில் காவல் துறை செய்த கொடூரம்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இது ஓவைசியின் டிஸ்னிலேண்ட், ட்ரீம்லேண்ட் அல்ல'- தேஜஸ்வி சூர்யா