கொல்கத்தா: பாஜக எம்எல்ஏ தேபந்திர நாத் ராயின் மரணம் அரசியல் கொலை என்ற குற்றச்சாட்டுக்கு மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.
பாஜக எம்எல்ஏ ராயின் மரணம் தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றக் கோரி தாக்கல்செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்த்து மேற்குவங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்துள்ளது.
"பாஜக எம்எல்ஏ மரணம் தொடர்பாக, ட்வீட் மற்றும் ஊடக அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்றாம் தரப்பினரால் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இதன் காரணமாக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் கோருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத், வட வங்காள மாவட்டத்தில் ஒரு தேநீர் கடைக்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறாய்வு முடிவில் இது தற்கொலை என்று உறுதிசெய்யப்பட்டது. ராய் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாக மாநில அரசு தெரிவித்தது.