புருலியா (மே.வங்கம்): உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மேற்கு வங்கத்தின் புருலியா, பங்குரா மற்றும் மேற்கு மெதினாப்பூர் பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது, “மேற்கு வங்கத்தில் மே 2ஆம் தேதி மம்தா பானர்ஜி ஆட்சி முடிவுக்கு வரும். அதன் பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “மேற்கு வங்கத்தில் மக்களின் ஆசிர்வாதம் பாஜகவுக்கு உள்ளது. மக்கள் பாஜக ஆட்சிக்கு வர விரும்புகின்றனர். மறுபுறம், திரிணாமுல் காங்கிரஸார் பசுவதையை ஆதரிக்கின்றனர். பசுவதைக்கு ஆதரவாக வாதிடுகின்றனர்.
பசுவதை தடைச் சட்டம் குறித்த பயமும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களிடம் இல்லை. மாநிலத்தில் மக்கள் பல ஆண்டுகளாக துன்பத்தை அனுபவித்துவருகின்றனர். இது மே2ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும். பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்” என்றார்.
இதையடுத்து, “காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்தை குண்டர்களின் கூடாரம் ஆக்கிவிட்டனர். இது போன்ற விஷயங்களில் பாஜக சகிப்புத்தன்மையை காட்டாது. திரிணாமுல் காங்கிரஸ் பசுவதையை ஆதரிக்கிறது. ஆனால் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் பசுவதை முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “இப்போதெல்லாம் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோர் கோயிலுக்கு வருவதை பார்க்க முடிகின்றது. அங்கு அவர்கள் நமாஸ் செய்வது போல் உட்கார்ந்திருக்கின்றனர்” என்றார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 2ஆம் தேதி அறிவிக்கப்படும். அன்றை தினம் மதியத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க: அயோத்தி ராம் லல்லா கோயிலில் யோகி தரிசனம்!